திருப்பூரில் 580 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது


திருப்பூரில் 580 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2020 2:42 AM IST (Updated: 15 Nov 2020 2:42 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் 580 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கிவைத்திருந்த 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

நல்லூர்,

திருப்பூர் மாநகரில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், விற்பனை செய்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி துணை கமிஷனர் (சட்டம் - ஒழுங்கு, குற்றம் போக்குவரத்து) சுரேஷ்குமார் அவர்களின் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் திருப்பூர் மாநகரம் முழுவதும் ரோந்து சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆங்காங்கே வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று தனிப்படையினர் சோதனையின் போது திருப்பூர் ஊரக போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தாராபுரம் புது ரோடு, மருதமலை ஆண்டவர் நகர், மில்காராம்மா காம்பவுண்டில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்படி அங்கு தனிப்படையினர் நடத்திய சோதனையில் 580 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

இது தொடர்பாக திருப்பூர் மங்கலம் ரோடு, குளத்துப்புதூர் ஜான் காம்பவுண்டில் வசித்துவரும் சுரேந்தர் (வயது 39), தாராபுரம் சாலை புதுரோடு அருகே உள்ள சீனிவாசா நகரை சேர்ந்த சுரேஷ்குமார் (42), சிக்கண்ணா கல்லூரி பின்புறம் மாஸ்கோ நகர், காமச்சிபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகராஜ் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

புகையிலை பொருட்களை கைப்பற்றி 3 பேரை பிடித்த தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜன், ஏட்டு முருகன், முதல்நிலை காவலர்கள் ஜனார்த்தனன், பன்னீர்செல்வம், ரமேஷ், போலீஸ்காரர் சிலம்பரசன் ஆகியோரை திருப்பூர் மாநகர கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார். அவருடன் துணை கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் உதவி ஆணையர்கள் இருந்தனர்.


Next Story