தானே, பால்கர் பகுதிகளில் எண்ணெய் நிறுவனங்களில் அதிரடி சோதனை ரூ.41 லட்சம் தரமற்ற எண்ணெய் பறிமுதல்
தானே, பால்கர் பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் ரூ.41 லட்சம் தரமற்ற எண்ணெயை பறிமுதல் செய்தனர்.
மும்பை,
தானே மற்றும் பால்கர் பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் தரமற்ற சமையல் எண்ணெய் தயாரிக்கப்படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் 4 நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தரமற்ற முறையில் சமையல் எண்ணெய் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு இருந்து ரூ.41 லட்சம் மதிப்பிலான தரமற்ற சமையல் எண்ணெயை பறிமுதல் செய்தனர்.
சோதனை குறித்து உணவு மற்றும் சமையல் துறை கொங்கன் மண்டல இணை கமிஷனா் எஸ்.எஸ். தேஷ்முக் கூறுகையில், “ இந்த நிறுவனங்கள் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் விதிகளை மீறி செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது “ என்றார்.
நோட்டீஸ்
அதிகாரிகள் பால்கர் மாவட்டம் ஹலோலியில் உள்ள நிறுவனத்தில் இருந்து ரூ.8 லட்சத்து 16 ஆயிரத்து 749 மதிப்பிலான தரமற்ற எண்ணெயையும், பிவண்டியில் உள்ள நிறுவனத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான எண்ணெயையும், மும்ரா அருகில் பிம்ரி பகுதியில் உள்ள நிறுவனத்தில் இருந்து ரூ.26 லட்சத்து 85 ஆயிரம் எண்ணெயையும், பிவண்டி, கால்கர் பகுதியில் இருந்து ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்து 119 மதிப்பிலான தரமற்ற எண்ணெயையும் பறிமுதல் செய்து உள்ளனர்.
விதிகளை மீறிய நிறுவனங்களில் தயாரிப்பு பணிகளை உடனடியாக நிறுத்தவும் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
Related Tags :
Next Story