பழுதடைந்த மின்கம்பங்கள் குறித்து வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவிக்கலாம் மின்வாரிய அதிகாரி தகவல்
நெல்லை மண்டலத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள் குறித்து வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என்று மின்சார வாரிய தலைமை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
நெல்லை,
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பருவமழை காலத்தில் ஏற்படும் மின்தடைகளை நிவர்த்தி செய்ய அனைத்து கோட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
மேலும் பருவமழை காலங்களில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க பொதுமக்கள் பாதுகாப்பு அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும். காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் யாரும் செல்ல வேண்டாம். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிக்ககூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிந்தவுடன் வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரையும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இடி, மின்னல்
இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் கம்பிகள் பகுதிகளில் தஞ்சம் அடையக்கூடாது. பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சம் அடையுங்கள்.
இடி, மின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தகூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல் கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது. மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கி இருந்தால் அதன் அருகே செல்லக்கூடாது. இதுகுறித்து அருகில் உள்ள மின்சார அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின் விளக்குகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும் போது மரக்கிளைகள் மின் கம்பியில் பட்டு மரம் வெட்டுபவர்கள் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மேல்நிலை மற்றும் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலகத்தை அணுகவும்.
மின் கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே கம்பிகளில் ஆடு, மாடுகளை காட்டுவதோ மின் கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை அமர்த்துவதோ கூடாது. மின்கம்பங்கள் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகட்டி துணிகளை காயப் போட கூடாது.
மின்கசிவு தடுப்பான் கருவி
மின் நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க அனைத்து கட்டிடங்களிலும் மின்கசிவு தடுப்பான் கருவியை மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் பொருத்த வேண்டும்.
மின்கசிவு தடுப்பான் கருவியானது பழுதான மின் சாதனங்களை இயக்கும் பொழுது ஏற்படும் மின் கசிவினை கண்டறிந்து அவற்றை உடனடியாக நிறுத்தி மின் விபத்துகளை தடுக்க ஏதுவாக இருக்கும். வீடுகள் மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் ஏற்படும் பழுதுகளை பொது மக்கள் தாமாக சரி செய்ய முயற்சிக்கக்கூடாது. மின்தடை நிவர்த்தி செய்ய 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்த வேண்டும்.
வாட்ஸ்-அப் தகவல்
பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பின்றி இருக்கும் பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக இருக்கும் கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மின் பகிர்வு பெட்டிகள் போன்றவற்றை படத்துடன் முழு முகவரியைக் குறிப்பிட்டு 9445850811, 8903331912 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி தகவல் தெரிவித்தால் உடனே நிவர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Related Tags :
Next Story