கணவரால் கைவிடப்பட்டதாக உதவித்தொகை பெறுவோர்களில் 60 சதவீதம் பேர் போலியானவர்கள் கவர்னர் தகவல்
கணவரால் கைவிடப்பட்டதாக உதவித்தொகை பெறுபவர்களில் 60 சதவீதம் பேர் போலியானவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் கணவரால் கைவிடப்பட்டதாக கூறி அரசின் உதவித்தொகையை குடும்பத்துடன் வசிப்பவர்கள் பெறுவது சமூக நலத்துறை அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்தது. அவர்கள் பெற்ற தொகையை திருப்பி வசூலிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புகார் செய்வதில்லை
புதுவையில் அனைத்து மக்கள் நலன் நடவடிக்கைகளும் சரியான நபர்களுக்கு செல்கிறதா? என்பதையும், யாரும் இந்த திட்டத்தை ஏமாற்றவில்லை என்பதையும் சரிபார்க்க வேண்டும். இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த துறைகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டும்.
பெண்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் வறியவர்களாக இல்லாதபோது ஆதரவற்ற உதவித்தொகை பெறுவது எங்களுக்கு தெரியவந்தது. நேரில் சென்று பார்த்தபோது அவர்கள் குடும்பம் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் இருந்தனர்.
பகிரங்கப்படுத்த...
அரசாங்கத்தின் நல்ல நோக்கத்துடன் கூடிய கொள்கைகள் மற்றும் வினியோகங்களை ஏமாற்ற மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பொய்யாக பெறப்பட்ட நன்மைகளை மீட்டெடுக்கும் முறை சம்பந்தப்பட்ட துறைகளால் செய்யப்பட வேண்டும். பொதுப்பணத்தை பாதுகாப்பது என்பது அனைத்து அரசு ஊழியர்களின் தலையாய கடமையாகும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தாலும் சரி. நியமிக்கப்பட்டவராக இருந்தாலும் சரி.
புதிய சமூக நலத்துறை செயலாளர் உதயகுமார் இதற்கான செயல்பாட்டை இப்போது உறுதிப்படுத்தி உள்ளார். போலியாக நன்மைகளை பெறும் நபர்கள் பகிரங்கப் படுத்தப்படுவார்கள். இந்த அமலாக்கம் பொதுநிதியில் கணிசமான சேமிப்புக்கு வழிவகுக்கும். இதனால் உண்மையான தகுதியுடன் காத்திருக்கும் நபர்கள் பயனடையக்கூடும்.
60 சதவீதம் போலியானவர்கள்
இந்த ஆய்வு நன்மைகள் தேவைப்படுபவர்களுக்கும், தகுதியுள்ளவர்களுக்கும் மட்டுமே செல்வதை உறுதி செய்வதே தவிர, தகுதியற்றவர்களுக்கும் மற்றும் அரசை ஏமாற்றுகிறவர்களுக்கும் அல்ல. இதில் ஆச்சரியம் என்னவென்றால் துறை அதிகாரிகளின் சோதனையின்போது 60 சதவீதம் போலியானது என்பது தெரியவந்தது. எனவே துறைகள் வழங்கும் அனைத்து நன்மைகளையும் மிகுந்த கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story