பெட்ரோல் பங்க் ஊழியர் நள்ளிரவில் கடத்திக் கொலை போலீஸ் பிடியில் 4 பேர் சிக்கினர்
புதுவையில் பெட்ரோல் பங்க் ஊழியரை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த 4 பேரை பிடித்து போலீசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.
புதுச்சேரி,
புதுவை அய்யங்குட்டிபாளையம் அமைதி நகரை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 27). இன்னும் திருமணமாகவில்லை. இவர் மேட்டுப் பாளையத்தில் சமீபத்தில் புதிதாக திறக்கப்பட்ட பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது நள்ளிரவில் 4 நபர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் பங்க்கிற்கு வந்தனர்.
அப்போது ஜெயப்பிரகாசிடம் தகராறு செய்து தடியால் தாக்கினர். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த மற்ற ஊழியர்கள் ஓடி வந்து தடுக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் அவர்களை மிரட்டியது. மேலும் அவர்கள் ஜெயப்பிரகாசை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கடத்திச் சென்றனர்.
இதனால் பயந்து போன அவர்கள் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
சேற்றில் மூழ்கடித்து கொலை
இதையடுத்து வில்லியனூர், கோரிமேடு போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு ஜெயப்பிரகாசை மீட்க விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதற்கிடையே அரசூர் மற்றும் பொறையூருக்கு நடுவில் உள்ள காலிமனை ஒன்றில் சேற்றில் ஜெயப்பிரகாஷ் தலையில் காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. அதாவது அவரை அந்த கும்பல் சேற்றில் மூழ்கடித்ததுடன் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று தலை நசுங்கி கிடந்த ஜெயப் பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக 2 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
கொலையாளிகள் சிக்கினர்
இதில், கொலையுண்ட ஜெயப்பிரகாசுக்கும், சண்முகாபுரத்தை சேர்ந்த சபரிநாதன் (25) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் அங்குள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்த போது தகராறு செய்து கொண்டதாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி மிரட்டி வந்ததும் தெரியவந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயப்பிரகாசின் வீடு அருகே அதே பகுதியை சேர்ந்த சபரி, எலி கார்த்திக் மற்றும் சிலர் பொது இடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். இதுகுறித்து தட்டிக்கேட்டதால் அவர்களுக்கும், ஜெயப்பிரகாசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சண்முகாபுரம் சபரிநாதன், டெம்போ ராஜா, அவரது உறவினர் மார்த்தான், முத்தியால்பேட்டை எலி கார்த்திக் உள்ளிட்டோர் ஜெயப்பிரகாசை கொலை செய்தது. தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், நாகராஜ் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட விவரம் தெரியவந்தது.
போலீஸ் பாதுகாப்பு
தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் சபரிநாதன், டெம்போ ராஜா, எலி கார்த்திக், மார்த்தான் ஆகிய 4 பேரும் போலீஸ் பிடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
கொலை செய்யப்பட்ட பிரகாசின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதிச்சடங்கு நடந்ததையொட்டி அய்யங்குட்டிபாளையம், குருமாம்பேட் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மேட்டுப்பாளையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கட்ட அஜீத் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அதே பகுதியில் மீண்டும் பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை செய்யப்பட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story