10 மாதங்களுக்கு பின்னர் குற்றவாளிகள் பிடிபட்டனர் பூட்டிய வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 7 பேர் கைது
மீஞ்சூர் அருகே பூட்டிய வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 201 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் (வயது 60). இவர் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி தனது இல்லத் திருமண நிகழ்ச்சிக்காக திருமண பத்திரிகை வழங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இந்நிலையில் அன்று இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் பீரோவில் இருந்த 361 பவுன் தங்க நகைகள், வைர நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து அவர் மீஞ்சூர் போலீசில் புகார் செய்து இருந்தார். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் மகிதாஅன்னகிருஷ்டி ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், மாரிமுத்து, வேலுமணி மற்றும் போலீசார் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் 10 மாதங்கள் கழித்து வழக்கில் துப்பு துலங்கியது. இந்த நிலையில், மீஞ்சூர் ரெயில்வே நிலையம் அருகில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
நகை-வெள்ளி பொருட்கள் பறிமுதல்
அப்போது பிடிபட்டவர்கள் புது கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிகண்டன் (30), மகரல் கிராமத்தை சார்ந்த யுவராஜ் (28), தானாங்குளத்தை சேர்ந்த முருகன்(20), சோழவரத்தை சேர்ந்த வெங்கடேசன் (23), சுண்ணாம்புகுளத்தை சேர்ந்த பிரகாஷ் (26), திருவள்ளூரை சேர்ந்த ரமேஷ் (45), காட்டு அப்பாவரத்தை சேர்ந்த சுரேஷ் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடமிருந்து 201 பவுன் தங்க நகைகள், 1 கிலோ 300 கிராம் வெள்ளிப்பொருட்கள், நகைகளை விற்ற பணத்தில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு 38 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story