பொங்கலூர் அருகே ஒரே நாளில் மர்ம ஆசாமிகள் துணிகரம்: 4 கோவில்களில் பூட்டை உடைத்து நகை கொள்ளை


பொங்கலூர் அருகே ஒரே நாளில் மர்ம ஆசாமிகள் துணிகரம்: 4 கோவில்களில் பூட்டை உடைத்து நகை கொள்ளை
x
தினத்தந்தி 25 Nov 2020 12:50 PM GMT (Updated: 25 Nov 2020 12:50 PM GMT)

பொங்கலூர் அருகே ஒரே நாளில் மர்ம ஆசாமிகள் 4 கோவில்களின் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் அணிவித்து இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் உண்டியலையும் உடைத்து பணத்தை அள்ளி சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொங்கலூர், 

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது வெள்ளநத்தம். இங்கு கரியகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் சாமிக்கு பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் பூஜை செய்ய கோவிலுக்கு வந்த பூசாரி கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, கோவிலுக்குள் சென்று கரியகாளியம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க மாங்கல்யம் இருக்கிறதா? என்று பார்த்தார். அப்போது அந்த மாங்கல்யத்தை காணவில்லை. அதை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் கோவிலில் இருந்த உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த பணத்தையும் இரவில் மர்ம ஆசாமிகள் அள்ளிச்சென்றதும் தெரியவந்தது.

அதேபோல் வெள்ளநத்தம் ஆதிதிராவிடர் காலனியை ஒட்டியுள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் அங்கு சாமியின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் மாங்கல்யத்தையும், அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மாரியம்மன் கோவில்

வெள்ளநத்தத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்ன காட்டூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலிலும் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவிலின் பூட்டை உடைத்து மாரியம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த 1¼ பவுன் மாங்கல்யத்தை மர்ம கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவினாசிபாளையம் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தில் மகாமாரியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலிலும் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள், சாமியின் கழுத்தில் அணிந்திருந்த 9 கிராம் தங்க மாங்கல்யத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக, காமநாயக்கன்பாளையம் மற்றும் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 கோவில்களின் பூட்டை உடைத்து சாமி சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி மொத்தம் 4 பவுன்நகையும், உண்டியலில் இருந்த ரூ.20 ஆயிரமும் கொள்ளை போயிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

4 தனிப்படைகள் அமைப்பு

இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரே நாளில் 4 கோவிலின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டி இருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே கும்பல் இந்த கொள்ளையை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story