ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை: மேலும் ஒரு குற்றவாளி கைது


ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை: மேலும் ஒரு குற்றவாளி கைது
x

சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி மும்பைக்கு புறப்பட்டது. கடந்த மாதம் 21-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேலுமலை பகுதியில் இந்த லாரி வந்தது. அப்போது பின்னால் மற்றொரு லாரியில் வந்த மர்ம கும்பல் டிரைவர்களை தாக்கி விட்டு ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார், மத்தியபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு முக்கிய குற்றவாளியான பரத் தேஜ்வாணி என்பவரை தனிப்படை போலீசார், டெல்லியில் கைது செய்தனர். பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார், அவரை ஓசூர் ஜே.எம்.-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒருவர் கைது

இந்த நிலையில், செல்போன்கள் கொள்ளை சம்பவம் தொடர்பாக திரிபுரா மாநிலத்தை சேர்ந்த மற்றொரு குற்றவாளியான அமிதாபா தத்தா (வயது 36) என்பவரை தனிப்படை போலீசார் கொல்காத்தாவில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை நேற்று ஓசூருக்கு போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் ஓசூர் அரசு மருத்துவமனையில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பின்னர், அவரை ஓசூர் ஜே.எம்.-2 நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி தாமோதரன், அமிதாபா தத்தாவை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார், அவரை ஓசூர் சப்- ஜெயிலில் அடைத்தனர்.

Next Story