திருப்புல்லாணி அருகே பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறித்தவர் கைது திருடிய 5 ஆடுகளும் பறிமுதல்
திருப்புல்லாணி அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறித்த சம்பவத்தில் கோவையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திருடிய 5 ஆடுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி அருகே உள்ளது நாகநாதசமுத்திரம். இந்த ஊரைச்சேர்ந்தவர் நாகலிங்கம் என்பவரின் மனைவி சிவபாக்கியம் (வயது60). இவர் வயல்வெளியில் விறகு கட்டைகளை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். மங்கம்மா சாலை பகுதியில் வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் சிவபாக்கியம் கழுத்தில் தங்க சங்கிலி இருப்பதை கண்டு திரும்பி வந்துள்ளனர். அவர்கள் சிவபாக்கியம் அருகில் வந்து முகவரி கேட்பதுபோல நடித்து அவர் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கோவை கோவில்பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த காளிராஜ் (46) என்பவரும் ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை அண்ணாநகர் மாந்தா மகேந்திரன் என்பவரும் கூட்டாக சேர்ந்து இந்த நகைபறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் கோவையை சேர்ந்த காளிராஜை கைது செய்தனர்.
பறிமுதல்
அவரிடம் நடத்திய விசாரணையில் கோவை சிறையில் இருந்தபோது மாந்தா மகேந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் அழைத்ததன்பேரில் இங்கு வந்து மேற்கண்ட செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். அவரிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர். இவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் திருப்புல்லாணி அருகே வலையனேந்தல் பகுதியை சேர்ந்த முனீஸ்வரி (45) என்பவரின் 3 ஆடுகளையும், முத்து உடையப்பன் வலசையை சேர்ந்த உடையார் (56) , ஜெகன்நகர் நாகராணி (38) ஆகியோரின் தலா ஒரு ஆடுகளையும் சில நாட்களுக்கு முன்னர் திருடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 5 ஆடுகளையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேற்கண்ட சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்த மாந்தா மகேந்திரனை போலீசார் தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story