கொத்தமல்லி தழைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விஜய் ரசிகர்கள்


கொத்தமல்லி தழைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விஜய் ரசிகர்கள்
x
தினத்தந்தி 29 Nov 2020 6:02 AM GMT (Updated: 29 Nov 2020 6:02 AM GMT)

விவசாயிகளிடம் விலைக்கு வாங்கிய கொத்தமல்லி தழைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விஜய் ரசிகர்கள்.

தேனி,

தேனி அருகே உள்ள பள்ளப்பட்டி, அம்மச்சியாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொத்தமல்லி தழைகள் சாகுபடி செய்து இருந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ கொத்தமல்லி தழைகள் ரூ.1-க்கு கூட விற்பனையாகவில்லை. இந்த விரக்தியில், விவசாயிகள் அவற்றை பிடுங்கி வைகை ஆற்றில் வீசி எறிந்தனர். இந்நிலையில், தேனி மாவட்ட தன்னார்வலர் குழுவினர் மற்றும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் இளைஞரணியை சேர்ந்தவர்கள் அம்மச்சியாபுரத்தில், கொத்தமல்லி சாகுபடி செய்த விவசாயிகளை நேரில் சந்தித்து கொத்தமல்லி தழைகளை சந்தை விலைக்கு வாங்கினர். மேலும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக பறிப்புக்கூலியை மிச்சப்படுத்தும் வகையில் தன்னார்வலர் களே வயலில் இறங்கி கொத்தமல்லி தழைகளை பறித்தனர்.

பின்னர் சுமார் 700 கிலோ கொத்தமல்லி தழைகளை விஜய் ரசிகர்கள் தேனி வாரச்சந்தை வளாகத்துக்கு எடுத்துச் சென்று பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்தனர். பொதுமக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அவற்றை வாங்கிச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க இளைஞரணி மாவட்ட தலைவர் பிரகாஷ் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர். இதற்கு சமூக வலைத்தளங் களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Next Story