துபாயில் இருந்து டி.வி., லேப்-டாப்பில் மறைத்து வைத்து கடத்தல்: சென்னை விமானநிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் 8 பேர் கைது
துபாயில் இருந்து டி.வி., லேப்-டாப்பில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த திருச்சியை சேர்ந்த முகமது இஷாக் (வயது 26), சென்னையை சேர்ந்த சாதிக் அலி (53), நாகூர் அனிபா (36) ஆகிய 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில், 3 பேரின் உடமைகளில் இருந்த எல்.இ.டி.டி.வி.களில் தங்கத்தை தகடுகளாக மாற்றி மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, 3 பேரிடமிருந்து ரூ.68 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் எடை கொண்ட 36 தங்க தகடுகளை கைப்பற்றினார்கள்.
அதேபோல், துபாயில் வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சிவகங்கை இளையான்குடியை உசேனையூர் ரகுமான் (22), முகமது கனி (46), சென்னையை சேர்ந்த காதர் உமாயூன் (25), அப்துல் கரீம் (52) ஆகிய 4 பேரிடம் இருந்த டி.வி., லேப்-டாப்களின் மானிட்டரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.81 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் எடைக்கொண்ட 28 தங்க தகடுகளை கைப்பற்றினார்கள்.
மேலும் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்து இறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் ஆசிக் (22) என்பவரின் உள்ளாடைகளில் இருந்து ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
மொத்தம் 8 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story