ஈரோட்டில் பரபரப்பு: செல்போனில் பேசிக்கொண்டு இருந்த வியாபாரியை கத்தியால் குத்திய வாலிபர்
ஈரோட்டில் செல்போனில் பேசிக்கொண்டு இருந்த வியாபாரியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபரை தீயணைப்பு படை வீரர்கள் துரத்தி சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கத்திக்குத்து
கரூர் மாவட்டம் வெங்கமேடு காமராஜ்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் விஜய் (வயது 24). அம்மிகல், ஆட்டுகல் விற்பனை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா (21). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
விஜய் நேற்று மாலை கரூரில் இருந்து ஈரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவி, குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தார்.
அவர் ஈரோடு காந்திஜிரோட்டில் தீயணைப்பு நிலையம் அருகில் வந்தபோது விஜயின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனால் அவர் சாலையோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போனில் பேசினார்.
அப்போது அங்கு நின்றிருந்த ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த ஒரு கத்தியை எடுத்து விஜயின் கழுத்தில் குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்த விஜய் அங்கேயே விழுந்தார். இதைப்பார்த்த அவரது மனைவியும், குழந்தைகளும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு கதறி அழுதனர்.
இதைக்கேட்டதும், அங்கு பணியில் இருந்த தீயணைப்பு படை வீரர்கள் ஓடோடி வந்தனர். உடனடியாக அவர்கள் விஜயை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
குடிபோதை
கத்தியால் குத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடியதை பார்த்த தீயணைப்பு படை வீரர்கள் அவரை துணிச்சலுடன் துரத்தினார்கள். சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ந்து துரத்தி சென்று அந்த நபரை அவர்கள் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர் ஈரோடு சூரம்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசாரின் விசாரணையில், அந்த நபர் ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்த ராமசாமியின் மகன் குணா என்கிற குணசேகரன் (28) என்பதும், குடிபோதையில் இருந்த குணசேகரன் விஜயை திடீரென கழுத்தில் குத்திவிட்டு சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈரோடு தீயணைப்பு நிலையம் பகுதியில் கத்திக்குத்து நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story