திருப்புவனம் வைகை ஆற்றில் நீர் வரத்து; விவசாயிகள் மகிழ்ச்சி
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று திருப்புவனம் வைகையாற்று படுகையை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
படுகை அணைக்கு வந்த தண்ணீர்
திருப்புவனம் வைகை ஆற்றில் உள்ள உயர்மட்ட பாலத்தின் மேல்பகுதியில் படுகை அணை கட்டப்பட்டுள்ளது. இந்த படுகை அணையின் அருகே அருப்புக்கோட்டை-திருப்புவனம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் படுகை அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதன் மூலம் இப்பகுதியில் செயல்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகளுக்கு நீர் ஆதாரம் கிடைத்து வந்தது.
கடந்த ஓராண்டாக வைகை ஆற்றில் தண்ணீர் சரிவர வரவில்லை. இதனால் படுகை அணை வறண்டு பாலைவனம் போன்று காணப்பட்டது. இந்த நிலையில் வைகை அணையில் கடந்த மாதம் 30-ந்தேதி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வருகிற 17-ந்தேதி வரை வரும் என தெரிகிறது.
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை, விரகனூர் வழியாக நேற்று திருப்புவனம் படுகை அணையை கடந்து ராமநாதபுரம் நோக்கி சென்றது. இதற்கு முந்தைய காலக்கட்டத்தில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் திருப்புவனம் வந்து சேர சுமார் 4 முதல் 5 நாட்கள் ஆகும். ஆனால் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், ஆற்று பகுதியில் ஈரத்தன்மை காணப்படுவதாலும் வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் 2 நாட்களில் திருப்புவனம் வைகை ஆற்றில் வந்து சேர்ந்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் இரு கரைகளில் உள்ள தென்னந்தோப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் கிணறு பகுதியில் தண்ணீர் ஊற்று அதிகரித்து வருகிறது. மேலும் தொடர்ந்து இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து தண்ணீர் பிரச்சினை இருக்காது பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் இந்த பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையால் மேலும் அதிக அளவில் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளதால் இந்த பகுதியில் சிறுவர்கள், இளைஞர்கள் ஆற்றில் இறங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story