மின்கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் கனிமொழி எம்.பி. பேச்சு


மின்கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 3 Dec 2020 10:18 AM IST (Updated: 3 Dec 2020 10:18 AM IST)
t-max-icont-min-icon

மின்கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஊத்துக்குளியில் நடந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

திருப்பூர்,

தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பரப்புரை பயணத்தை தி.மு.க. மாநில மகளிரணி செயலாளரும், எம்.பி. யுமான கனிமொழி மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிற அவர் நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி விஜயமங்கலம் சாலையில் நடந்த கூட்டத்திற்கு வந்தார். அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்திற்கு தி.மு.க. ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் பி.பி.ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். பேரூர் தி.மு.க. செயலாளர் ராசுகுட்டி வரவேற்றார். ஈரோடு மாவட்ட செயலாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்து பேசினார்.

இதில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

ஊத்துக்குளி வெண்ணெய்க்கு பெயர் பெற்றது. விவசாயிகள் தான் இந்த பகுதிக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆனால் தற்போது இதே பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் கஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். மேலும், அவர்கள் நியாயம் கிடைக்க போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால், நிலங்கள் எல்லாம் பாதிக்கப்படுகிறது. நிலத்தின் மதிப்பு குறைந்து போகிறது என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இதுபோல் பாரத் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் பணி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலத்தின் மையப்பகுதிகளில் குழாய்களை பதிப்பதாக அறிவித்துள்ளார்கள்.

நியாயமான இழப்பீடு

உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை விட்டு விட்டு நிலத்தின் அடியில் கேபிள் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும். பல இடங்களில் இதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. தமிழகத்திலும் இதனை செய்ய வேண்டும். உயர்மின் கோபுரங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. டெல்லி இன்று பற்றி எரியக்கூடிய அளவிற்கு வட இந்தியாவில் இருக்கிற விவசாயிகள் போராடி வருகிறார்கள். டெல்லியில் கடும் குளிர் நிலவி வருகிறது. அந்த குளிரையும் பொருட்படுத்தாமலும், அசுத்தமான காற்றை சுவாசித்தும் அவர்கள் போராடி வருகிறார்கள்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இந்த வேளாண் சட்டங்களை நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்த்துள்ளனர். எதிர்கட்சிகள் எதிர்க்கிறார்கள். ஆனால் இதனை ஆதரித்து பேசிய ஒரே கட்சி அ.தி.மு.க. தான். இந்த சட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என கூறிக்கொள்கிறார். இது மிகப்பெரிய துரோகம்.

5 மாதத்தில் விடியல் பிறக்கும்

விவசாயிகள் பாரத் பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டம் மற்றும் உயர்மின் கோபுரம் போன்ற பணிகளுக்கு எதிராக போராடும் போது, அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாத ஆட்சி நடந்து வருகிறது. தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக இயற்றப்படும் சட்டங்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது.

விவசாயிகளுக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள இந்த சட்டங்களை பாராளுமன்றத்தில் தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் தி.மு.க. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இன்னும் 5 மாதத்தில் விடியல் பிறக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மிகப்பெரிய அநீதி

டெல்லியில் போராடுகிறவர்கள் இடைத்தரகர்கள் மற்றும் எதிர்கட்சியினர் என பா.ஜனதா மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து கனிமொழி எம்.பி. கூறியதாவது:- இதை விட விவசாயிகளை கொச்சைப்படுத்த முடியாது. விவசாயிகள் அவர்களது வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிறார்கள். போராடுகிற விவசாயிகளை கொச்சைப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் ஆகும் “என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், காங்கிரஸ் கட்சியின் ஒன்றிய செயலாளர் செந்தில், ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கெயில் மற்றும் உயர்மின்கோபுரம் போன்ற திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் கனிமொழி எம்.பி. மனுக்களை பெற்றுக்கொண்டார். அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர் தாளப்பதி மற்றும் குன்னத்தூர் பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்திலும் பங்கேற்றார்.

Next Story