பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருப்பூர் மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு; 700 போலீசார் நியமனம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருப்பூர் மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணியில் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினம்
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் தமிழக ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படையினர், சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல், எழும்பூர், கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, சேலம் உள்பட அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால், சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அந்த சிறப்பு ரெயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் தான் பயணிக்க முடியும். மேலும், தீவிர சோதனைக்கு பிறகே ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பயணிகளை ரெயில்களில் பயணிக்க அனுமதித்து வருகின்றனர்.
தீவிர சோதனை
இந்தநிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கூடுதலாக, போலீசார் ரெயில் நிலையங்களில் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மோப்ப நாய்கள், ‘மெட்டல் டிடெக்டர்’ உதவியுடன் ரெயில் நிலையங்கள், ரெயில்கள் மற்றும் தண்டவாளங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி திருப்பூர் மாநகரம் முழுவதும் நேற்று இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் 700 போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். மாநகரில் 10 சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் வாகனங்கள் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
முக்கிய இடங்களாக கருதப்பட்ட 38 இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வழிபாட்டுத்தலங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் ரெயில் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்து அதன் பிறகே அனுமதிக்கிறார்கள். திருப்பூரில் இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு நீதி பாதுகாப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அது போல் குமரன் சிலை முன்பு காலை 10 மணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
Related Tags :
Next Story