போரூர் அருகே தனியார் வங்கியில் தீ விபத்து
போரூர் அருகே வீட்டுக்கடன் வழங்கும் தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின.
தீ விபத்து
சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல், மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் உள்ள 3 மாடிகள் கொண்ட ஒரு கட்டிடத்தின் 2-வது தளத்தில் வீட்டுக்கடன் வழங்கும் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. அதன் முதல் தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், தரை தளத்தில் கடைகள், 3-வது தளத்தில் உடற்பயிற்சி கூடமும் செயல்பட்டு வருகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டுகடன் வழங்கும் வங்கி பூட்டி இருந்தது. நேற்று மதியம் அந்த வங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கரும்புகை தரை தளத்தின் படிக்கட்டு வழியாக வெளியே வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
1 மணி நேரம் போராட்டம்
உடனடியாக பூந்தமல்லி, ராமாபுரம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால் வங்கியின் கதவு பூட்டி இருந்ததால், கட்டிடத்தின் முன் பகுதியில் உள்ள கண்ணாடிகளை உடைத்து, அதன் வழியாக உள்ளே தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.
எனினும் தீ விபத்தில் வங்கியின் உள்ளே இருந்த மேஜை, நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் தீயை அணைத்து விட்டதால் முதல் தளத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் உடற்பயிற்சி கூடம் மற்றும் கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுபற்றி போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story