தென்காசி அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து பலி; மற்றொரு விபத்தில் பால் வியாபாரி சாவு


தென்காசி அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து பலி; மற்றொரு விபத்தில் பால் வியாபாரி சாவு
x

தென்காசி அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார். நெல்லையில் நடந்த மற்றொரு விபத்தில் பால் வியாபாரி இறந்தார்.

கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம்
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி வள்ளி நாயகி (வயது 54). இருவரும் தென்காசி ஆசாத் நகர் பகுதியில் உள்ள தனியார் அலுமினிய தொழிற்சாலையில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக 2 பேரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். கேசவன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் வள்ளி நாயகி இருந்தார். தென்காசி அருகே மத்தளம்பாறை அன்புநகர் பகுதியில் சென்றபோது, திடீரென வள்ளிநாயகி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவரது தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

பலி
உடனடியாக அவரை கேசவன் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவில் வள்ளி நாயகி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்
நெல்லை பழையபேட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மேத்யூ (45). பால் வியாபாரியான இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் அவர் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேத்யூ நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story