தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் முதல்-அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்


தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் முதல்-அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Dec 2020 7:33 AM IST (Updated: 10 Dec 2020 7:33 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருவாரூர்,

புரெவி புயலால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் ஏராளமான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் நாசமடைந்தன. இந்தநிலையில் மழை பாதிப்புகளை பார்வையிட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு தமிழக முதல்- அமைச்சர் எடப்படி பழனிசாமி நேற்று வந்தார். நாகை மாவட்டம் நாகூர் பகுதிக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தினர் அளித்த மனுவில், நாகூர் பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்களை தூர்வார வேண்டும். நாகூர் தர்கா குளத்தின் சுவர் முழுவதும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த குளத்தை சுற்றி உள்ள வீடுகளும் இடியும் நிலை உள்ளது. எனவே குளத்தின் சுவரை சீரமைத்து தருவதுடன் குளத்தை சுற்றிலும் சாலை அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நாகூர் சமூக ஆர்வலர்கள் அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், நாகூரை நாகை நகராட்சியில் இருந்து பிரித்து சிறப்பு நிலை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும். நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி இரவு பணியில் டாக்டர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். நாகூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். நாகூர் கடற்கரையை தூய்மைப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

நிவாரணம்

திருவாரூருக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு இன்சூரன்ஸ் தொகை கிடைக்காத அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் மாசிலாமணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில், கனமழையால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். கொரோனா காலத்திலும் உயிரை பணயம் வைத்து சாகுபடி பணியை மேற்கொண்டு உணவு தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கோவில் நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பலனடையும் வகையில் சாகுபடி சான்று வழங்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

அப்போது முதல்- அமைச்சருடன் அமைச்சர் அன்பழகன், நகராட்சிகளின் இயக்குனர் பாஸ்கரன், கலெக்டர்கள் பிரவீன் பி.நாயர், சாந்தா, கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், வேளாண்மை துறை கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம், இணை இயக்குனர் உத்திராபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Next Story