பெண்ணின் புகைப்படத்தை ‘மார்பிங்’ செய்து வெளியிடுவதாக மிரட்டல்; கரூர் வாலிபர் கைது
பெருமாநல்லூரில் இளம்பெண்ணின் புகைப்படத்தை ‘மார்பிங்’ செய்து சமூக வலை தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
அந்த அழைப்பை ஏற்று, அந்த பெண் பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய ஆசாமி ‘‘உங்களுடைய முகத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவேன். அப்படி வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.20 ஆயிரம் தரவேண்டும், போலீசாருக்கு தெரியப்படுத்தினால் கண்டிப்பாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்’’ எனவும் மிரட்டியதாக தெரிகிறது.
போலீசில் புகார்
இதனால் பயந்துபோன அந்த அந்த பெண் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அந்த ஆசாமியை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர். அப்போது அந்த ஆசாமி மீண்டும் தொடர்பு கொண்டால் தாங்கள் கூறியபடி அந்த ஆசாமியிடம் பேசும்படி அந்த பெண்ணுக்கு போலீசார் அறிவுரை கூறினர்.
இதற்கிடையில் அந்த ஆசாமி மீண்டும் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட போது அந்த பெண் ‘‘நீங்கள் இருக்கும் பகுதிக்கு பணம் கொண்டுவர முடியாது. எங்கள் பெற்றோருக்கு தெரிந்து விடும். ஆகையால் பெருமாநல்லூர் பகுதிக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளவும்’’ என கூறியுள்ளார். இதை நம்பிய, அந்த ஆசாமி பெருமாநல்லூர் நால்ரோடு பகுதிக்கு வந்து அந்த பெண்ணிடம் பணம் பெற முயன்றபோது அங்கு மறைந்திருந்த போலீசார் அந்த ஆசாமியை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் நாகராஜ் (வயது 21) என்பதும், கரூர் சின்னதாராபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துவிட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பணம் பறித்து வந்ததையும் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story