தேனி மாவட்டத்தில் போலீஸ் பணிக்கான தேர்வை 14 ஆயிரம் பேர் எழுதினர்; 1, 269 பேர் தேர்வு எழுத வரவில்லை


தேனி அருகே அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் போலீஸ் பணிக்கான தேர்வு எழுதிய பெண்களை படத்தில் காணலாம்.
x
தேனி அருகே அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் போலீஸ் பணிக்கான தேர்வு எழுதிய பெண்களை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 14 Dec 2020 1:15 AM IST (Updated: 13 Dec 2020 11:13 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் போலீஸ் பணிக்கான தேர்வை 14 ஆயிரம் பேர் எழுதினர். 1,269 பேர் தேர்வு எழுத வரவில்லை.

போலீஸ் தேர்வு
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர், தீயணைப்பு வீரர் ஆகிய பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 15 ஆயிரத்து 282 பேர் ஹால்டிக்கெட் பெற்று இருந்தனர். இந்த தேர்வுக்காக தேனி, கொடுவிலார்பட்டி, போடி, முத்துத்தேவன்பட்டி, வீரபாண்டி, வடபுதுப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தேர்வு மையங்களுக்கு வெளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு அறைக்குள் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையத்துக்கு காலை 7 மணியில் இருந்தே தேர்வர்கள் வரத் தொடங்கி விட்டனர்.

14 ஆயிரம் பேர்
கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால் தேர்வு எழுத வந்த அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் ஆக்சிமீட்டர் கருவி மூலம் ஆக்சிஜன் அளவு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் முக கவசங்களை வழங்கினர்.

தேர்வு அறையில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து தேர்வு எழுதினர். மாவட்டத்தில் இந்த தேர்வை 14 ஆயிரத்து 13 பேர் எழுதினர். தேர்வு எழுத ஹால்டிக்கெட் பெற்றவர்களில் 1,269 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் கள் கொண்டு வரப்பட்டன. தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

ஆய்வு
தேர்வு மையங்களை தேனி மாவட்ட தேர்வு கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதுகாப்பு பணிகளில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 10 துணை சூப்பிரண்டுகள், 57 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்வு நடந்தது.

Next Story