ராணிப்பேட்டையில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்


போளிப்பாக்கத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்
x
போளிப்பாக்கத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்
தினத்தந்தி 15 Dec 2020 4:03 AM IST (Updated: 15 Dec 2020 4:03 AM IST)
t-max-icont-min-icon

20 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க. சார்பில் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

போளிப்பாக்கம்
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வன்னிர் சங்கம், பா.ம.க. சார்பில் கடந்த 1-ந்தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று தமிழகம் முழுவதிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு அளிக்கும் அறவழி போராட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம், போளிப்பாக்கத்தில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அ.ம.கிருஷ்ணன் தலைமையில், பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சென்று கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனிடம் மனு அளித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார், மாநில துணை பொதுச்செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். மாநில சட்ட பாதுகாப்பு துணை செயலாளர் சக்கரவர்த்தி, மாவட்ட துணை செயலாளர் வடிவேலு, அமைப்பு செயலாளர் எல்.கே.கார்த்திக்ராஜா, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் சண்முகம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை 
வன்னியர் சங்கம், பா.ம.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் போளிப்பாக்கம் கிளை செயலாளர் பச்சையப்பன் நன்றி கூறினார்.

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தில் மொத்தம் 208 இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனுக்கள் அளிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில், மாநகர செயலாளர் துளசிராமன் தலைமையிலும், சேனூர் கிராமத்தில் காட்பாடி தொகுதி பொறுப்பாளர் அசோக்குமார் தலைமையிலும் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட சந்தைக்கோடியூர், ஏலகிரி கிராமம், பொன்னேரி, திரியாலம், மண்டலவாடி உள்ளிட்ட 12 இடங்களில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு, வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

சந்தைக்கோடியூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஜோலார்பேட்டை பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜோலார்பேட்டை நகர செயலாளர் ஞானமோகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன், நகர தலைவர் ராஜீவ்காந்தி உள்பட பலர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்து கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரிடம் மனு கொடுத்தனர்.

ஜோலார்பேட்டை ஒன்றிய பா.ம.க. சார்பில் ஏலகிரி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மாநில துணை அமைப்பு செயலாளர் குட்டிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு அளித்தனர். 

நகர துணை செயலாளர் வழக்கறிஞர் கபிலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வாணியம்பாடி
வாணியம்பாடி பஸ் நிலையத்தில் இருந்து நகர செயலாளர் எஸ்.கோபால் தலைமையில் மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் லூயிஸ்மேரி ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக சென்று காதர்பேட்டையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

இதேபோல் உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில், பேரூராட்சி செயலாளர் அன்பழகன் தலைமையில் வணங்காமுடி உள்பட பலர் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்தனர்.

ஆற்காடு
ஆற்காட்டில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றனர். அதை ராணிப்பேட்டை மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பழனி தலைமையில், ஆற்காடு கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுநாதனிடம் கோரிக்கை மனுவாக கொடுத்தனர். இதில் மாநில பசுமை தாயக அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் திருமுருகன், பா.ம..க. நகர செயலாளர் அருண்குமார், நகர தலைவர் சஞ்சீவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வாலாஜா
வாலாஜா பஸ் நிலையம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் எம்.கே.முரளி, வாலாஜா நகர செயலாளர் ஞானசேகரன், வன்னியர் சங்க நகர செயலாளர் ஜானகிராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல் வாலாஜாவை அடுத்த படியம்பாக்கத்திலும், கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் பகுதியில் உள்ள லத்தேரி, கே.வி.குப்பம், சென்னங்குப்பம், கீழ்ஆலத்தூர் உள்ளிட்ட 22 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு பா.ம.க., வன்னியர் சங்கம் சார்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் பா.ம.க. மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு கொடுத்தனர்.

திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகர பா.ம.க. சார்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் ஊர்வலமாக வந்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. நகர செயலாளர் டி.சிவா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் டி.கே.ரவி, நகர தலைவர் டி.கே.எம்.முத்தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு தமிழக அரசு வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதில் நகர அமைப்பு செயலாளர் ராஜகோபால், ஜி.ரமேஷ்குமார், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

Next Story