ஈரோட்டில் பரபரப்பு; பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை; விடிய விடிய நடந்தது


கட்டுமான நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள்
x
கட்டுமான நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள்
தினத்தந்தி 15 Dec 2020 4:22 AM IST (Updated: 15 Dec 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் விடிய விடிய சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபல கட்டுமான நிறுவனம்
ஈரோட்டில் ‘ஸ்ரீபதி அசோசியேட்ஸ்’ என்ற பெயரில் பிரபல கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட பல்வேறு அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மேலும், ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ‘ஸ்ரீபதி அசோசியேட்ஸ்’ நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் தங்கபெருமாள் வீதியில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு கார்களில் சென்றார்கள். சுமார் 30 அதிகாரிகள் கொண்ட குழுவினர் அதிரடியாக அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.

நள்ளிரவு
அப்போது அலுவலகத்தின் கதவை அடைத்துவிட்டு உள்ளே சென்ற அதிகாரிகள் அங்குள்ள பணியாளர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், அவர்களிடம் இருந்த செல்போன்களை 
அதிகாரிகள் வாங்கி கொண்டனர். அங்குள்ள தொலைபேசியை பயன்படுத்த தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை வாங்கி சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட தொடங்கினார்கள். வருமானத்துக்கு ஏற்ப உரிய வரி செலுத்தப்பட்டு உள்ளதா? என்று அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தினார்கள்.

இந்த சோதனை நேற்று நள்ளிரவும் தொடர்ந்தது. ஈரோடு, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

விடிய விடிய சோதனை
இதேபோல் ஈரோடு அருகே கஸ்பாபேட்டையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனால் அதிகாரிகள் அலுவலகத்துக்கும், வீட்டுக்கும் கார்களில் சென்று வந்த வண்ணம் இருந்ததால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

வருமான வரி சோதனை நள்ளிரவை கடந்தும் விடியவிடிய நடந்தது. இதனால் இன்றும் (செவ்வாய்க்கிழமை) வருமான வரி சோதனை தொடரும் என்று தெரிகிறது. இந்த சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதா? முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? போன்ற விவரங்கள் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. எனவே சோதனை முடிந்த பிறகு பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா? எவ்வளவு பணம் சிக்கியது? போன்ற விவரங்கள் தெரியவரும்.

ஈரோட்டில் பிரபல கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் உரிமையாளர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story