நாகர்கோவிலில் பரிதாபம்; காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை; போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
வீட்டுக்குள் பிணங்கள்
தூத்துக்குடி சிதம்பரநகரைச் சேர்ந்தவர் மகாவைகுண்டம் (வயது 25). நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் கரிசூழ்ந்தாள் என்ற கஸ்தூரி (24). திருமணமான இவர்கள், இருவரும் நாகர்கோவில் கோட்டார் பறக்கை ரோடு பைத்துல்மாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மாடியில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு குழந்தை இல்லை. மகாவைகுண்டம் அரசு, தனியார் நிறுவனங்கள், வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை ஒப்பந்தம் முறையில் மேற்கொண்டு வந்தார். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் இவர்களது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதில் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் வீட்டு கதவை திறந்து பார்த்த போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது.
போலீஸ் விசாரணை
அதாவது, கணவன்- மனைவி இருவரும் வாயில் நுரைதள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 2 பேரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் இருந்த மகாவைகுண்டம், கஸ்தூரி ஆகியோரது ஆதார் கார்டுகளை கைப்பற்றி அதில் இருந்த முகவரியை தொடர்பு கொண்டு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
முதல் சந்திப்பில் காதல்
திருமணத்துக்கு முன்பு மகாவைகுண்டம், தூத்துக்குடியில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்காக நெல்லைக்கு சென்றுள்ளார். அந்த நிறுவனத்தில் கஸ்தூரி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர்களது முதல் சந்திப்பிலேயே இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டனர். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டதுடன் அடிக்கடி பேசி வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டிலும் பெற்றோர் சம்மதிக்காததால் இருவரும் குமரி மாவட்டம் வந்துள்ளனர்.
வாடகை வீட்டில் குடியேறினர்
இங்கு சாமிதோப்பு, சுசீந்திரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடியேறினர். அங்கிருந்து மகாவைகுண்டம் வேலைக்கு சென்று வந்தார். அதன்பிறகு அவர்கள், நாகர்கோவில் கோட்டார் பறக்கை ரோடு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கு கணவன்- மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். அவர்கள் இடையே எப்போதும் சிறு சிறு வாய்த்தகராறு கூட ஏற்பட்டது கிடையாதாம். அந்த அளவுக்கு இருவரும் ஒருவருக்கொருவர் அன்போடு இருந்துள்ளனர்.
அப்படி இருக்கும் போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதனால் அவர்கள் தற்கொலை செய்து இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் தனியார் நிறுவனங்களில் இருந்து கேமரா பொருத்தியதற்கான பணம் வர வேண்டியது உள்ளது என அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் மகாவைகுண்டம் கூறியதாக தெரிகிறது. அப்படி அதிக பணம் வர வேண்டியது இருந்தும், அது சரியான அளவுக்கு கைக்கு வராததால் மனம் உடைந்து அவர்கள் தற்கொலை செய்து இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
குழந்தை இல்லாத ஏக்கமா?
மேலும் அங்குள்ள ஒரு சுயஉதவிக்குழுவில் கஸ்தூரி உறுப்பினராக இருந்துள்ளார். அதில் கடன் வாங்கி அந்த பணத்தை மாதாமாதம் ஒழுங்காக செலுத்தி வந்துள்ளார். மேலும் அவர்கள் வீட்டுக்கு பணம் கேட்டு கடன்காரர்கள் யாரும் வந்ததாகவும் தெரியவில்லையாம். அதனால் கடன் பிரச்சினை இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
அவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதுதொடர்பாக கணவன்- மனைவி இருவரும் சிகிச்சை எடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் கோவில்களுக்கு வேண்டுதல்கள் செய்து வந்ததாகவும் தெரிகிறது. எனவே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் மனம் உடைந்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேல் விசாரணை நடந்து வருகிறது. இருந்தாலும் தம்பதி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story