2-ம் நாள் காத்திருப்பு போராட்டத்தில் தடுப்புகளை கீழே தள்ளி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகள்; போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு; 51 பேர் கைது


போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது எடுத்தபடம்.
x
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது எடுத்தபடம்.
தினத்தந்தி 16 Dec 2020 4:44 AM IST (Updated: 16 Dec 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக நடந்த காத்திருப்பு போராட்டத்தில் போலீசார் கைது செயியும்போது தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் 51 பேரை போலீசார் கைது செய்தனர்.

2-ம் நாளாக போராட்டம்
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று 2-ம் நாளாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. முன்னதாக அவர்கள் அங்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த சட்டம் 2020-ஐ திரும்ப பெறக் கோரியும், தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்றும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர்.

தள்ளுமுள்ளு
அப்போது அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் தடுப்புகளை தள்ளி விட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசாருக்கும், அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story