அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் நாளை கிராமசபை கூட்டங்கள்; ஸ்ரீபெரும்புதூர் குன்னம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் நாளை கிராம சபை கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் குன்னம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
மு.க.ஸ்டாலின்
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தயாராகி வருகிறது. இந்தநிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளில் கிராம சபை மற்றும் வார்டு கூட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நாளை (புதன்கிழமை) முதல் 10 நாட்களுக்கு கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 16 ஆயிரம் கிராமசபை கூட்டங்களை நடத்த இருக்கிறார்கள்.
இந்த கூட்டங்களில் பங்கேற்பவர்களின் விவரங்களை தி.மு.க. நேற்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியம், குன்னம் ஊராட்சியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். வேலூர் மத்திய மாவட்டம் பேரணாம்பட்டு வடக்கு ஒன்றியம் மேல்பட்டி ஊராட்சியில் நடக்கும் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூந்தமல்லி மேற்கு ஒன்றியம், நடுக்குத்தகை ஊராட்சியில் பொருளாளர் டி.ஆர்.பாலு.
பொன்முடி-ஆ.ராசா
திருச்சி மத்திய மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியம், ஏனாதிமங்கலம் ஊராட்சியில் துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, சென்னை வடக்கு மாவட்டம், ராயபுரம் பகுதி 49-வது வட்டம் மீனவர் பஞ்சாயத்து துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திருப்பூர் கிழக்கு மாவட்டம், குண்டடம் கிழக்கு ஒன்றியம் வட சின்னார்பாளையம் ஊராட்சி துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story