நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்தது; பொதுமக்கள் குளிக்க அனுமதி


நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்து ஓடியதை படத்தில் காணலாம்
x
நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்து ஓடியதை படத்தில் காணலாம்
தினத்தந்தி 22 Dec 2020 6:05 AM IST (Updated: 22 Dec 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் மழை பெய்யாததால், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

நீர்வரத்து குறைந்தது
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பரவலாக பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்ததால், அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. பாபநாசம், கடனாநதி உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாவட்டத்தில் படிப்படியாக மழை அளவு குைறந்தது. மாவட்டத்தில் நேற்று எங்கும் மழை பதிவாகவில்லை. இதனால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியது. தொடர்ந்து ஆற்றில் குளிக்க விதித்த தடையும் நீக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆற்றங்கரைகளில் மீண்டும் உற்சாகமாக குளிக்க தொடங்கினர்.

அணைகள் நீர்மட்டம்
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142.45 அடியாகஉள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,846 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,862 கன அடி தண்ணீ்ர் திறந்து விடப்பட்டு உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 144.68 அடியாக உள்ளது. மாவட்டத்தின் மற்றொரு பிரதான அணையான 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 110.75 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,224 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 480 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு உள்ளது.

பனிப்பொழிவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. அதிகாலையில் கடுங்குளிராக இருந்தது.

இதனால் அதிகாலையில் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. சிலர் கம்பளியாலான ஆடைகளை அணிந்து வெளியே சென்றனர்.

Next Story