சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் துணை சபாநாயகர் - பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகள் எடுபடாது என்றும், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
கிணத்துக்கடவு,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சொலவம்பாளையம், வடபுதூர், கொண்டம்பட்டி, நம்பர்10.முத்தூர், சொக்கனூர், நல்லட்டிபாளையம், கோவில்பாளையம், கப்பளாங்கரை, வடசித்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு குப்பை அள்ளுவதற்கு தலா ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 13 பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நாகராணி, துணைத் தலைவர் எம்.எம்.ஆர்.துரை, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாப்பு என்கிற திருஞானசம்பந்தம், சதிஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சாய்ராஜ் சுப்பிரமணியம் வரவேற்று பேசினார்.
இதில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு அந்தந்த ஊராட்சி பணியாளர்களிடம் பேட்டரி வாகனத்திற்கான சாவியை வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் சர்க்காரியா கமிஷன் நியமிக்கப்பட்டு அதன் காரணமாக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அ.தி.மு.க. ஊழலை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம். பொங்கல் பரிசாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ள ரூ.2,500 ஏழை, எளிய மக்களின் மனதில் அமுதத்தை வார்த்ததாக உள்ளது.
பொங்கல் வந்துவிட்டது. கொரோனா தொற்று நோய் இருக்கிறது, வேலை வாய்ப்பு இல்லை என்று மக்கள் களங்கப்படாமல் நம்மைக் காப்பதற்கு முதல்-அமைச்சர் இருக்கிறார். முதல்-அமைச்சரின் செல்வாக்கு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார். ஆனால் அவருடைய குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடையே எடுபடாது.
சட்டசபை தேர்தலை வருகிற ஏப்ரல் மாதம் 3-வது வாரம் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர், துணை-முதல்-அமைச்சரின் கருத்து குறித்து நான் தேர்தல் கமிஷனிடம் வேண்டுகோள் விடுத்து உள்ளேன். அவர்களும் அதனை பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். எப்போது சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் நிச்சயமாக அ.தி.மு.க. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் அ.தி.மு.க. நிர்வாகி டி.எல்.சிங், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story