கியாஸ் ஏஜென்சியில் கொள்ளை முயற்சி அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம்


கியாஸ் ஏஜென்சியில் கொள்ளை முயற்சி அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 25 Dec 2020 12:06 PM IST (Updated: 25 Dec 2020 12:06 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே கியாஸ் ஏஜென்சியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓடினர்.

திட்டக்குடி,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் அருள்தாஸ் (வயது 58). இவர் தனது வீட்டு அருகில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்ததும் ஏஜென்சியை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ஏஜென்சியில் இருந்து அலாரம் ஒலித்தது. இந்த சத்தம் கேட்டதும், கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது ஏஜென்சியின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் அங்கு யாரும் இல்லை.

கடப்பாரையால் உடைத்து...

இதனால் அதிர்ச்சியடைந்த அருள்தாஸ், இதுகுறித்து திட்டக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் காரில் வந்த மர்மநபர்கள் சிலர், ஏஜென்சியின் ஷட்டரை கடப்பாரையால் உடைத்து உள்ளே செல்ல முயன்றுள்ளனர். அப்போது ஏஜென்சியில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒழித்தது. இந்த சத்தம் கேட்டு பதறிய மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி்ச்சென்றது தெரிந்தது.

வலைவீ்ச்சு

இதற்கிடையே மர்மநபர்கள் ஓட்டிவந்த கார், ஆவினங்குடி அருகே சென்றபோது, காரின் பின்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதையடுத்து அவர்கள் காரை சாலையிலேயே நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்த கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கியாஸ் ஏஜென்சியில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story