நடிகர் வடிவேலு சினிமா படக்காட்சி போல் ராஜவீதியை காணவில்லை என்று மனு அளித்த கிராம மக்கள்


நடிகர் வடிவேலு சினிமா படக்காட்சி போல் ராஜவீதியை காணவில்லை என்று மனு அளித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 27 Dec 2020 4:26 AM IST (Updated: 27 Dec 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் வடிவேலு சினிமா படக்காட்சி போல் ராஜவீதியை காணவில்லை என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழன், பிரகதீஸ்வரர் கோவிலை கட்டி வழிபட்டார். அவர், மாளிகைமேட்டில் உள்ள அரண்மனையில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையில் கணக்க விநாயகர் கோவிலை கட்டி, முதலில் கணக்க விநாயகரை வழிபட்ட பின்னரே, ராஜவீதி வழியாக பிரகதீஸ்வரர் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜவீதி நாளடைவில் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. மாளிகைமேடு கிராமத்தில் உள்ள அரண்மனையில் இருந்து ராஜவீதி மற்றும் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தற்போது பாதையே இல்லாமல் உள்ளது. இதனால் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ராஜவீதி வழியாக சென்று கணக்க விநாயகரை வழிபடுவதற்கான வாய்ப்பு குறைந்தது.

கண்டுபிடித்து தருமாறு மனு

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்ட கலெக்டராக இருந்த ராஜேஷ் லக்கானி, அந்த பாதையை பார்வையிட்டு, அதனை மீண்டும் சீரமைப்பதற்கான பணி தொடங்கிய நேரத்தில், அவர் பணி மாறுதல் காரணமாக சென்று விட்டார். பின்னர் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், ராஜவீதியை காணவில்லை என்றும், அதனை கண்டுபிடித்து தருமாறு ேகாரிக்கை விடுத்தும் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் அரண்மனையில் இருந்து பிரகதீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் ராஜவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘கிணற்றை காணவில்லை’ என நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த சினிமா படக்காட்சி போன்று, ராஜவீதியை காணவில்லை என்று பொதுமக்கள் மனு அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story