பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க வேண்டும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை


பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க வேண்டும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Dec 2020 9:59 AM IST (Updated: 27 Dec 2020 9:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அய்யம்பேட்டை,

பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலை தித்திக்கும் பொங்கலாக மாற்றுவது அச்சு வெல்லமாகும். பொங்கல் பண்டிகை சமயத்தில் அச்சு வெல்லம் தயாரிக்கும் விதமாக தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். அய்யம்பேட்டை அருகே மாகாளிபுரம், வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், உள்ளிக்கடை, கணபதி அக்ரகாரம், பட்டுக்குடி, உள்ளிக்கடை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அச்சு வெல்லம் தயார் செய்வதற்காக விவசாயிகள் கரும்பு பயிரிட்டு உள்ளனர். இவர்கள் தற்போது வெல்லம் தயாரிக்க தொடங்கி உள்ளனர். இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் ரூ. 2500 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை முந்திரி, 1 முழு கரும்பு ஆகியவை பொங்கல் தொகுப்பாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெல்லம் வழங்க வேண்டும்

இதுகுறித்து கணபதி அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் கூறியதாவது:-

தற்போது இந்த பகுதியில் மழை ஒய்ந்து வெயில் அடிக்க தொடங்கியுள்ள நிலையில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் ஆரம்பித்து உள்ளது. இந்தநிலையில் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.ஆயிரம் முதல் 1,500 வரை விலை போகின்றது. உரம் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் இந்த விலை விவசாயிகளுக்கு முற்றிலும் கட்டுப்படியாக கூடியது அல்ல. தற்போது தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் சர்க்கரை (சீனி) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் என்றாலே அனைவரும் பயன்படுத்துவது வெல்லம் தான். எனவே அரசு வெல்லத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து சர்க்கரைக்கு பதிலாக பொதுமக்களுக்கு வெல்லத்தை வழங்க வேண்டும். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவதோடு, விவசாயிகளுக்கும் ஓரளவு லாபகரமான விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்

Next Story