தி.மு.க. ஆட்சி அமைந்ததும் சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வை ரத்து செய்வோம் திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. ஆட்சி அமைந்ததும் சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வை ரத்து செய்வோம் திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 29 Dec 2020 6:57 AM IST (Updated: 29 Dec 2020 6:57 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திருச்சி,

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சி மணப்பாறை, டி.வி.எஸ்.டோல்கேட், முதலியார்சத்திரம், எடத்தெரு அண்ணாசிலை, காந்திமார்க்கெட், சிந்தாமணி அண்ணாசிலை உள்பட பல்வேறு இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அங்குள்ள ராணுவ வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து பிரசார வேனில் நின்றபடி அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் முன்பு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தனியார் மயமாக்க முயற்சி

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளை ஓட, ஓட விரட்டி அடித்தீர்கள். தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்து, இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை கொடுத்தீர்கள். ஆனால் அப்போதும்கூட மோடியும், தமிழகத்தில் ஆட்சி செய்கிற எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திருந்தவே இல்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி தமிழகத்துக்கு ஏதாவது நல்லது செய்துள்ளாரா?. மக்களுக்கு வேண்டாததை எல்லாம் திணிக்கக் கூடிய ஆட்சியாக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி இருக்கிறது.

டெல்லியில் 40 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். புதிய வேளாண் சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கிறார்கள். ஆனால் மத்தியில் பா.ஜ.க. அரசு விமான நிலையம், ரெயில்வே என அனைத்தையும் தனியார் மயமாக்கி வருகிறார்கள். தற்போது விவசாயத்தையும் தனியார்மயமாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறி வருகிறார். தி.மு.க. எப்போதும் விவசாயிகள் பக்கம் துணை நிற்கும்.

தமிழகத்தில் ஏழை மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ கனவை நனவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞர் கருணாநிதி மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்தார்.

ஆனால் பா.ஜ.க. நீட் தேர்வு கொண்டு வந்தது. அதை இங்குள்ள அ.தி.மு.க. ஆட்சியோ மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, நீட் தேர்வை ஆதரித்தது. இதனால் அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி மருத்துவராக முடியாமல் முதல் ஆளாக பலியானார். இதுவரை 16 மாணவ-மாணவிகள் மருத்துவராக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நீட் தேர்வு ரத்து

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜல்லிக்கட்டு தடையில் இருந்து விலக்கு பெற்றதைப்போல, சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வை ரத்து செய்வோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

வணிகர்கள் சந்திப்பு

இதனை தொடர்ந்து சத்திரம் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் உதயநிதி ஸ்டாலினுடன் வணிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, "கடந்த 10 ஆண்டுகளாக வணிகர்களின் எந்த பிரச்சினையும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. வழக்கமாக அரசியல்வாதிகள் தான் ஆட்சி செய்வார்கள். ஆனால் இந்த ஆட்சியில் அதிகாரிகள்தான் ஆட்சி செய்கிறார்கள். தி.மு.க.வினரை போல, நாங்களும் ஆட்சி மாற்றம் கொண்டு வர முடிவு செய்துவிட்டோம். தி.மு.க. ஆட்சி அமையும்போது, வணிகர் நலனுக்காக ஒரு அமைச்சர் வேண்டும்" என்றார். பின்னர் வணிகர்கள் கோரிக்கை மனுவை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

பின்னர் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை தொகுதிகளின் பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. அங்கு உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "வருகிற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். நான் 234 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்கிறேன். பத்திரிகைகளும் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பு கூறியிருக்கிறார்கள். ஆனால் இதை வைத்து நாம் மெத்தனமாக இருந்து விடாமல் தி.மு.க. ஆட்சியை அமைக்க அனைவரும் உழைக்க வேண்டும்" என்றார். அப்போது சில நிர்வாகிகள் மணப்பாறை தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கக் கூடாது என்று கோஷம் எழுப்பினார்கள். அதற்கு உதயநிதி ஸ்டாலின், 'உங்களுடைய கோரிக்கையை தலைவர் ஸ்டாலின் இடத்தில் கொண்டு சேர்க்கிறேன். அதேநேரம் கூட்டணி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.

மணப்பாறை

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் மல்லிகைப்பட்டி சமத்துவபுரத்தில் நடந்த மக்கள் சபை நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. இதுகுறித்து, கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் புகார் மனு கொடுத்துள்ளார்.

ஆகவே, இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற உண்மை இன்னும் மக்களாகிய நம் அனைவருக்கும் தெரியவில்லை. இதுதான் தற்போதுள்ள ஆட்சியின் நிலை. பா.ஜ.க.வின் அடிமையாக தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகி்றது. 200 சட்டமன்ற தொகுதி என்பது நம் இலக்காக இருந்தாலும் 234 தொகுதிகளிலும் நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். அதனைத்தொடர்ந்து மணப்பாறை பஸ் நிலையம் அருகேயும் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.

சிலைகளுக்கு மாலை

இதேபோல, திருச்சி பொன்மலை, மேலகல்கண்டார்கோட்டை, மாஜி ராணுவ காலனி, அரியமங்கலம் எஸ்.ஐ.டி. உள்ளிட்ட பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக பொன்மலையில் உள்ள பெரியார், அம்பேத்கர் மற்றும் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

கலந்து கொண்டோர்

நிகழ்ச்சிகளில், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., மணப்பாறை ஒன்றியச் செயலாளர் ராமசாமி, ஒன்றியக்குழு தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர் கீதா ராஜா காவேரி மணியன், ஊராட்சி மன்ற தலைவர் மகாலெட்சுமி சண்முக வேலாயுதம், செக்கனம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரா.இன்னாசி, வையம்பட்டி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இ.பெர்னாட் சாமிநாதன் மற்றும திருச்சி தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் என்.செந்தமிழ்ச்செல்வன், திருவெறும்பூர் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர்கள் அழகு கே.செந்தில்(குவளக்குடி) ,ஏ.சத்யகீதா(நடராசபுரம்), ரீனா கிளாரெட் மேரி(பத்தாளப்பேட்டை), ஜெ.ரேணுகாதேவி(பனையக்குறிச்சி), கே.ககந்தி(அரசங்குடி), டி.சின்னம்மாள் வாழவந்தன்கோட்டை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story