தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 30 Dec 2020 1:14 AM GMT (Updated: 30 Dec 2020 1:14 AM GMT)

தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

லால்குடி,

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் கடந்த திருச்சி மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 2-வது நாளான நேற்று லால்குடி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

லால்குடி சிறுதையூர் ரவுண்டானா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசுகையில், லால்குடி சட்டமன்ற தொகுதியில் 4-வது முறையாக தி.மு.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

தி.மு.க. ஆட்சி காலத்தில் தான், லால்குடியில் அரசு கலைக்கல்லூரி, கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரி, 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள், குமுளூர் வேளாண்மை பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் குறித்தும் குறிப்பிட்டார்.

வரவேற்பு

முன்னதாக லால்குடி ரவுண்டானா பகுதியில் தி.மு.க. சார்பில் உதயநிதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் பிரசார கூட்டத்தில் திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய, நகர கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆட்சி மாற்றத்திற்கு தயார்

பின்னர் மதியம் ஸ்ரீரங்கம் தொகுதியில் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ராஜகோபுரம் முன்பு திறந்த வேனில் நின்றபடி, உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

செல்லும் இடமெல்லாம் தி.மு.க.விற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டார்கள். தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தவும் முடிவு செய்து விட்டார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிட்டு 38-ல் வென்று காட்டினோம். தமிழகத்தில் 52 சதவீத வாக்குகள் பெற்று இந்தியாவில் 3-வது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை தி.மு.க.வுக்கு அளித்தீர்கள்.

விவசாயிகளுக்கு அநீதி

புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருகிறது பாரதீய ஜனதா அரசு. அதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். ஜெயலலிதா மட்டும் இன்னும் உயிரோடு இருந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு வந்திருக்காது. இன்று அவரது வழியில் நடப்பதாக கூறும் ஆட்சியாளர்கள் நீட் தேர்வை எப்படி ரத்து செய்ய முடியும்? என்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டப் போராட்டம் நடத்தி தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்து விடுவார்.

முதல்அமைச்சர் தனது உறவினருக்கு பணிகளில் ஒப்பந்தம் கொடுத்து ரூ.6 ஆயிரம் கோடிவரை ஊழல் செய்துள்ளார்.

234 தொகுதிகளில் வெற்றி

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். ஆனால், இதே எழுச்சி தேர்தல் வரை நீடித்தால் 234 தொகுதிகளையும் தி.மு.க. வென்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலில் மதில் சுவர் சிதிலம் அடைந்திருப்பதாகவும், புறநகர் பஸ் நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள். இவையெல்லாம் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு, நிச்சயம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாலையில் திருச்சி ஆழ்வார்தோப்பில் இஸ்லாமிய மக்களையும், உய்யக்கொண்டான் மலைப்பகுதியில் உள்ள மக்களையும் சோமரசம்பேட்டை, குழுமணி பகுதி மக்களையும் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Next Story