அரியலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்


அரியலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2020 10:53 PM GMT (Updated: 30 Dec 2020 10:53 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் ேபாராட்டம் நடைபெற்றது. இதையொட்டி பா.ம.க.வினர் உடலில் பட்டை, நாமமிட்டு ஊர்வலமாக வந்தனர்.

அரியலூர்,

வன்னிய சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, அரியலூர் மாவட்டத்தில் பா.ம.க.வினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் அரியலூரில் பா.ம.க. மாநில துணைத்தலைவர் சின்னதுரை தலைமையில் ஊர்வலமாக வந்த கட்சியினர், ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஜெயங்கொண்டத்தில் ஊர்வலமாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானத்திடம், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் பா.ம.க.வினர் மனு அளித்தனர். இதில் மாநில துணை தலைவர் ராமதாஸ், நகர செயலாளர் மாதவன் தேவா, நகர தலைவர் ரெங்கநாதன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உடலில் பட்டை, நாமமிட்டு...

தா.பழூரில் நடந்த போராட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானவர்கள் அனைக்குடம் கிராமத்தில் இருந்து இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக தா.பழூர் வந்தனர். பின்னர் உடல் முழுவதும் பட்டை நாமமிட்டு, ேகாரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து ஊர்வலமாக ஒன்றிய அலுவலகம் சென்று, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரனிடம் மனு கொடுத்தனர்.

ஆண்டிமடம் ஒன்றிய பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமையில் கட்சியினர் உள்ளிட்டோர் அரை நிர்வாணமாக சென்று ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதனிடம் மனு அளித்தனர். செந்துறை பஸ் நிலையத்தில் இருந்து பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் உலக சாமிதுரை தலைமையில் ஏராளமானவர்கள் கோஷமிட்டபடி ஊர்வலமாக வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து, செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாவிடம் மனு கொடுத்தனர். அப்போது ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி, பசுமைத்தாயக அமைப்பாளர் செல்வகடுங்கோ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மாட்டு வண்டியில் ஊர்வலம்

திருமானூரில் அரியலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமையில் பா.ம.க.வினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், ஜெயக்குமாரியிடம் மனு அளித்தனர். இதில் கட்சியின் மாவட்ட தலைவர் ரவிசங்கர், மாவட்டக்குழு துணை தலைவர் அசோகன் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.

Next Story