ஏழைகளுக்கு வழங்கப்பட இருக்கும் ரூ.2,500 பொங்கல் பரிசை முடக்க மு.க.ஸ்டாலின் சதி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


ஏழைகளுக்கு வழங்கப்பட இருக்கும் ரூ.2,500 பொங்கல் பரிசை முடக்க மு.க.ஸ்டாலின் சதி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 Dec 2020 7:20 AM IST (Updated: 31 Dec 2020 7:20 AM IST)
t-max-icont-min-icon

ஏழைகளுக்கு வழங்கப்பட இருக்கும் ரூ.2,500 பொங்கல் பரிசை முடக்க மு.க.ஸ்டாலின் சதித்திட்டம் தீட்டுவதாக முசிறி பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

தா.பேட்டை,

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா அரசு அமைந்தால் தான் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகளுக்கு இந்த அரசு வழங்கி வரும் சலுகைகள், நலத்திட்டங்களை தொடர முடியும். ஆதலால் தேர்தலில் இந்த தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் மின்சார நிலைமை எப்படி இருந்தது? என்பது உங்களுக்கு தெரியும். கடுமையான மின்வெட்டினால் மின்சாரம் எப்போது இருக்கும். எப்போது போகும் என தெரியாது. அதனால் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, ஜெயலலிதா மேற்கொண்ட சூறாவளி சுற்றுப்பயணத்தின் போது, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஆறே மாதங்களில் மின்வெட்டினை சரி செய்து தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி காட்டுவேன் என வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

தேசிய விருது

அந்த வாக்குறுதியின்படியே தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி காட்டினார். அது இன்று வரை தொடர்கிறது. மின் நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி வருவதற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு தேசிய விருதினை வழங்கி இருக்கிறது. அதேபோல் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாளுவதற்காகவும் தேசிய விருது பெற்று இருக்கிறோம். மேலும், போக்குவரத்துத்துறைக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.

கிராமப்புற மாணவர்கள் மருத்துவக்கல்வியை பெறவேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 313 பேர் மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா 2011-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்றபோது, தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 100-க்கு 32 பேர் என இருந்தது. ஆனால் இன்று 100-க்கு 49 பேர் உயர்கல்வி படித்து வருகிறார்கள். இந்திய அளவில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.

நிலம் அபகரிப்பு

தி.மு.க.ஆட்சியின்போது, அராஜகம் தலைவிரித்தாடியது. நல்ல விலை மதிப்புள்ள நிலத்தை தி.மு.க.வினர் எங்கு பார்த்தாலும் அதனை உடனடியாக அபகரித்து விடுவார்கள். அப்படி அவர்கள் அபகரித்த நிலத்தை மீட்பதற்காகவே ஜெயலலிதா காவல்துறையில் நில அபகரிப்பு தடுப்புபிரிவை தொடங்கினார். அதன் மூலம் தி.மு.க.வினர் அபகரித்த நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தி.மு.க.வினர் ஓட்டலில் சாப்பிட்டால் காசு கொடுக்க மாட்டார்கள்.

பெரம்பலூரில் அழகுநிலையம் நடத்திய ஒரு பெண்ணை தி.மு.க. மாவட்ட செயலாளர் எப்படியெல்லாம் தாக்கினார் என்ற காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். 24 மணிநேரமும் உழைக்கக்கூடிய ஒரு தொழில் உள்ளது என்றால் அது விவசாயம் தான். நானும் ஒரு விவசாயி தான். விவசாயி என்ற முறையில் இந்த தொழிலில் எவ்வளவு சுமை, வலி இருக்கிறது என்பது எனக்கு தெரியும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உழைப்பு முக்கியம். அந்த உழைப்பை விவசாய தொழிலில் தான் முழுமையாக பெற முடியும். விவசாய தொழிலாளர்களுக்காக, விவசாயிகளுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்று கூறி வருகிறார். நாம் எவ்வளவு நல்ல திட்டங்களை செயல்படுத்தினாலும், அது ஸ்டாலின் கண்களுக்கு தெரியப்போவது இல்லை.

பொங்கல் பரிசை முடக்க சதி

தைப்பொங்கல் திருவிழா விரைவில் வர இருக்கிறது. பொங்கல் திருநாளில் விவசாயிகள், ஏழை, எளிய தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறோம். மக்கள் வரிப்பணத்தில் இருந்து இதனை வழங்குகிறோம். அதையும் கொடுக்கவிடக்கூடாது என்பதற்காக ஸ்டாலின் சதிதிட்டம் தீட்டி அதை முறியடிக்க நினைக்கிறார்.

இதற்காக அவருடைய வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். கடந்த ஆண்டு பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கப்படும் என்று நாம் அறிவித்தபோதும், இதேபோல் நீதிமன்றத்துக்கு தி.மு.க.வினர் சென்றார்கள். நாம் அதனை முறியடித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story