ரூ.75 ஆயிரம் கோடியில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


ரூ.75 ஆயிரம் கோடியில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 31 Dec 2020 1:53 AM GMT (Updated: 31 Dec 2020 1:53 AM GMT)

ரூ.75 ஆயிரம் கோடியில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை பேசினார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெற்றிலை மற்றும் வாழை விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு விவசாயிகள் வெற்றிலை மாலை அணிவித்து தலையில் மலர் கிரீடம் சூட்டினார்கள். இதனை தொடர்ந்து தொட்டியம் விவசாயிகள் சங்க தலைவர் மருதப்பிள்ளை பேசுகையில், ‘‘ஜேடார் பாளையத்தில் இருந்து திருச்சி வரை உள்ள பகுதிகளில் காவிரி கிளை வாய்க்கால்கள் மூலம் வெற்றிலை, கரும்பு, வாழைகள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர்வசதி தர வேண்டும். திருச்சிக்கு மேற்கே உள்ள பகுதி காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளை அறிவிக்க வேண்டும். கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து வரும் விவசாயிகள் குத்தகைதாரர் பெயர் மாற்றுதலில் உள்ள சிக்கல்களை தீர்க்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார். மேலும், காமராஜருக்கு பின்னர், விவசாயிகளை தேடி வந்து குறைகளை தீர்க்கும் ஒரே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்று பேசினார்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 86 வயதான காந்திபித்தன் பேசுகையில், ‘‘எனது 50 ஆண்டுகால பொதுவாழ்வில் எடப்பாடி பழனிசாமி போல் ஒரு முதல்-அமைச்சரை பார்த்தது இல்லை. அவர் தான் தமிழகத்தின் முதல்-அமைச்சராக தொடர்ந்து இருக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்’’என்றார்.

இதனை தொடர்ந்து விவசாயிகளின் கருத்துக்களுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

வாழை பொருட்கள் உற்பத்தி மையம்

வாழையில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தயாரிப்பது பற்றி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறேன். வாழையை வெட்டிய பின்னர், அதன் தண்டில் இருந்து பிஸ்கட் தயாரிக்க முடியும். வாழையினுடைய ஒவ்வொரு பகுதியும் பயனுள்ளதாக தான் உள்ளது.

எனவே வாழையில் எந்த ஒரு பொருளையும் வீணடிக்காமல் அதனை விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடியதாக மாற்றுவதற்கான ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. அதன் விளைவாக தொட்டியத்தில் வாழை பொருட்கள் உற்பத்தி மையம் விரைவில் அமைக்கப்படும். முசிறி-குளித்தலை இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக ஒரு கதவணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்

தமிழகத்தின் நீராதாரத்தை பெருக்குவதற்காகவும், விவசாயிகள் தண்ணீர் பிரச்சினையின்றி விவசாய பணிகளை மேற்கொள்ள ஏதுவாகவும், இப்படி பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இவையெல்லாவற்றையும் தவிர, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் ரூ.75 ஆயிரம் கோடியில் உறுதியாக நிறைவேற்றப்படும் என்பதை விவசாயிகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

இதற்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதல்-அமைச்சர்களை தமிழக அரசின் பிரதிநிதிகள் சந்தித்து பேசிவிட்டு வந்து இருக்கிறார்கள். அதற்கு அவர்களும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்து இருக்கிறார்கள். காவிரியை சீரமைப்பதற்காக ரூ.3 ஆயிரம் கோடியில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒத்துழைப்போடு அதுவும் நடைபெற்று வருகிறது. இப்படி எது முடியுமோ, அதனையெல்லாம் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மண்வெட்டி பிடித்த முதல்-அமைச்சர்

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொட்டியம் அருகே வாழை தோப்பில் வேலை செய்து கொண்டு இருந்த விவசாய தொழிலாளர்களை சந்தித்து பேசினார். ஒரு தொழிலாளியிடம் இருந்து மண்வெட்டியை கையில் வாங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிலத்தை தோண்டி சில அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.

அதன்பின்னர், துறையூர் அருகே கண்ணனூர் என்ற இடத்தில் விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. வீடு,வீடாக நடந்து சென்றார்

அதன்பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துறையூர் பாலக்கரை பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். துறையூரில் கொப்பம்பட்டி காலனி என்ற இடத்தில் தெருவில் இறங்கி வீடு, வீடாக சென்று அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்பின்னர், மண்ணச்சநல்லூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். முதல்-அமைச்சர் சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பூங்கொத்துகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Next Story