ராமநத்தம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


ராமநத்தம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 31 Dec 2020 11:22 AM IST (Updated: 31 Dec 2020 11:22 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே உள்ளது பெரங்கியம் கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.

அத்தியாவசிய தேவையான குடிநீர் கூட சரியான நேரத்தில் இவர்களுக்கு கிடைப்பதில்லை. கடந்த 10 நாட்களுக்கு மேலாக ராமநத்தம் ஊராட்சி நிர்வாகத்தால் இவர்களுக்கு குடிநீர் வழங்கவில்லை.

சாலை மறியல்

இதனால் வெகுண்டெழுந்த கிராம மக்கள் நேற்று, விருத்தாசலம்-ராமநத்தம் நெடுஞ்சாலையில் காலிகுடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்துவை பெண்கள் சிறைபிடித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்ததின் பேரில் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

எனக்கு ஓட்டு போடவில்லை

குடிநீர் பிரச்சினை குறித்து கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், எங்கள் கிராம பகுதிக்கு ஊராட்சி நிர்வாகத்தால் சாலை, தெரு மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதிகள் என்று எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இது குறித்து ஊராட்சியில் சென்று கேட்டால், நீங்கள் எனக்கு ஓட்டு போடவில்லை அதனால் எதுவும் செய்து தர முடியாது என்று ஊராட்சி தலைவர் தெரிவிக்கிறார். இதனால் நாங்கள் என்ன செய்வது, ஊராட்சி நிர்வாகத்தால் புரக்கணிப்பு செய்யப்பட்டு வருகிறோம். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story