காஞ்சீபுரம் அருகே துணிகரம்; தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 40 பவுன் நகைகொள்ளை; தனிப்படை போலீசார் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
காஞ்சீபுரம் அருகே தனியார் நிறுவன மேலாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நிறுவன மேலாளர்
காஞ்சீபுரம் அருகே திம்மசமுத்திரம் பாலாஜி நகரில் வசிப்பவர் சண்முகப்பிரியன் (வயது 35). இவருக்கு சரண்யா என்ற மனைவியும், கிருத்திகா, தன்ஷிகா என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்
ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சண்முகப்பிரியன் தனது குழந்தையின் மருத்துவ பரிசோதனைக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத் துடன் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். சிகிச்சை முடிந்ததும் அங்குள்ள உறவினர் ஒருவர் வீட்டில் மனைவி, குழந்தைகளை தங்க வைத்துவிட்டு, அவர் பணிக்கு சென்று விட்டார்.
இதையடுத்து, தனது பணியை முடித்துவிட்டு மீண்டும் சென்னையில் உள்ள தனது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு நேற்றுமுந்தினம் திம்மசமுத்திரத்தில் உள்ள தனது வீட்டிற்குவந்துள்ளார்.அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார்.
நகை கொள்ளை
அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து சண்முகப்பிரியன் பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை, இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் சென்று நின்றது.அதைத்தொடர்ந்து, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், கொள்ளை நடந்த வீட்டின் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story