கர்நாடகத்தில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு: 5 மாணவர்களுக்கும் வைரஸ் தொற்று


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Jan 2021 5:14 AM IST (Updated: 6 Jan 2021 5:14 AM IST)
t-max-icont-min-icon

கா்நாடகத்தில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 5 மாணவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பிறகு வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்ததால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. மேலும் ஆன்லைன் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது.

இதன்காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பி.யூ.சி. இறுதியாண்டு கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து மாநிலத்தில் பள்ளிகளையும் திறக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த 1-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் வந்தனர். மேலும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் ஹாவேரி, சிக்கமகளூருவில் 3 ஆசரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றிய பள்ளிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிைலயில் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 5 மாணவ-மாணவிகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வருகிறார்கள். கர்நாடகத்தில் பள்ளி திறந்ததும் ஆசிரியர்களும், மாணவர்களும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி வருவது பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

Next Story