தொடர் மழை-காற்றால் குளித்தலை பகுதியில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


தொடர் மழை-காற்றால் குளித்தலை பகுதியில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Jan 2021 7:41 AM IST (Updated: 7 Jan 2021 7:41 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை-காற்றால் குளித்தலை பகுதியில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. இதனை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை வட்ட பகுதியில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா, கர்நாடகா, அட்சயா பொன்னி ரகங்கள், ஆர்.என்.ஆர்., என்.எல்.ஆர்., டி.கே.எம். போன்ற நெல் ரகங்களை விவசாயிகள் அதிகளவு பயிரிட்டுள்ளனர். இந்த நெல் பயிர்கள் சில இடங்களில் அறுவடை செய்யும் நிலையிலும், பல இடங்களில் பாதி விளைச்சல் அடைந்த நிலையிலும் இருந்தன.

சாய்ந்தன

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குளித்தலை பகுதியில் காற்றுடன் பெய்யும் தொடர்மழையின் காரணமாக அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த நெற்கதிர்கள் முதல் விளைந்து வந்த நெற்பயிர்கள் வரை சுமார் 1,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விட்டதாக கூறப்படுகிறது. ஒருசில இடங்களில் சிறிய அளவிலும், சில இடங்களில் பாதி அளவும், சில இடங்களில் முழுவதுமாகவும் நெற்பயிர்கள் சாய்ந்து விட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விளைச்சல் அடையும் தருவாயில் இருந்த பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் கிடக்கிறது. இதனால், பல விவசாயிகள் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இழப்பீடு

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறுகையில், குளித்தலை வட்ட பகுதியில் பயிரிட்டுள்ள நெல் ரகங்களில் அட்சயா பொன்னி, கர்நாடக பொன்னி போன்ற ரகங்களின் நெற்பயிர்கள் உயரமாக வளரக்கூடியது. மழையின் காரணமாக அதன் தண்டின் அடிப்பகுதி உறுதித்தன்மை இல்லாத காரணத்தால், இந்த ரக நெற்பயிர்கள் பெரும்பாலான இடங்களில் சாய்ந்து விட்டன. மேலும், தொடர்ந்து மழை பெய்தால் குளித்தலை வட்ட பகுதியில், 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் 50 சதவீதம் வரை சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால், நாங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தற்போது சாய்ந்த நெற்பயிர்கள் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கணக்கெடுத்து சேதத்திற்கு ஏற்ப விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story