நெல்லையில் பள்ளிகள் திறப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை; பெற்றோர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது
பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இேதபோல் நெல்லை மாவட்டத்தில் 60 பள்ளிக்கூடங்களில் பெற்றோருடன் கருத்து கேட்பு கூட்டமும் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று குறைந்ததையொட்டி ஊரடங்கு படிப்படியாக விலக்கப்பட்டு வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதை பின்பற்றி தமிழகத்திலும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் முதல்கட்டமாக பள்ளிகளை திறக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம், இந்த கல்வி ஆண்டு திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளிகள் திறப்பது குறித்தும், நடப்பு கல்வியாண்டில் எவ்வாறு ஆசிரியர் பணிகளை மேற்கொள்ள வேண்டும், பள்ளிகள் திறக்கப்பட்டால் கொரோனா தடுப்பு குறித்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக அரசு முதல் முறையாக தயாரித்துள்ள ஸ்மார்ட் அடையாள அட்டைகளை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் எம்பெருமாள், சுடலை, ரேணுகா, அலுவலரின் நேர்முக உதவியாளர் டைட்டஸ் மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 302 பேர் கலந்து கொண்டனர்.
பெற்றோர்களிடம் கருத்து கேட்பு
அப்போது மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பள்ளி திறப்பு குறித்து கருத்து கேட்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 60 மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சேர்ந்த சேர்ந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் நேற்று கருத்து கேட்கப்பட்டது.
தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துக்கள் கேட்கப்படும் என்று கல்வி அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story