கோவை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்; 7 பேருக்கு மறுவாழ்வு
மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்த குடும்பத்தினரை டாக்டர்கள் பாராட்டினர்.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுடைய மகன் ரோகித் கண்ணா (வயது 17). இவர், கடந்த 31-ந் தேதி கோவை அருகே பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் செல்லும் போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை கே.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் அவர் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது
குடும்பத்தினர் முன்வந்தனர். இதையடுத்து, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் அறிவுறுத்தலின் பேரில், மருத்துவ குழுவினர் பாலகிருஷ்ணன், செந்தில்குமார், செல்வகுமார், பழனிசாமி, ரமேஷ் ஆறுமுகம், வர்மா, இளங்கோவன், ராமசாமி சேதுராமன், ஆர்.ஆர்.ரவி உள்ளிட்டோர் ரோகித் கண்ணாவின் இதயம், சிறுநீரகம், கண்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை அறுவைசிகிச்சை மூலம் அகற்றினர்.
பின்னர், கல்லீரல் மற்றும் 2 சிறுநீரகங்கள் கே.ஜி மருத்துவமனை நோயாளிகளுக்கும், கண்கள் அரவிந்த் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. மேலும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கு தானமாக அளிக்கப்பட்டது. இதற்காக தனி விமானம் மூலம் இதயம், நுரையீரல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர். மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்த குடும்பத்தினரை டாக்டர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story