காணொலி காட்சி குறைதீர் கூட்டத்துக்கு எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கலெக்டர் சிவராசு பேச்சுவார்த்தை


காணொலி காட்சி குறைதீர் கூட்டத்துக்கு எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கலெக்டர் சிவராசு பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 10 Jan 2021 2:55 AM GMT (Updated: 10 Jan 2021 2:55 AM GMT)

காணொலி காட்சி மூலம் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் கலெக்டர் எஸ்.சிவராசு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் வழக்கம்போல மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை காணொலி காட்சி மூலம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ம.ப.சின்னத்துரை தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ரெங்கநாதன், மணிவேல், பொருளாளர் சிங்காரம், செயலாளர் கணேசன் மற்றும் ஜனநாயக அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

கலெக்டர் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் போராட்டம் நடந்த இடத்திற்கு கலெக்டர் எஸ்.சிவராசு காரில் வந்திறங்கினார். பின்னர் விவசாய சங்க தலைவர் சின்னத்துரையிடம் பேசினார். அப்போது அவர், கொரோனா பொதுமுடக்கத்தை காரணம் காட்டி கடந்த 9 மாதங்களாக நேரடியாக நட க்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமும் ரத்து செய்யப்பட்டன.

மாறாக பொதுமக்கள் மனுக்களை புகார் பெட்டியிலும், விவசாயிகள் காணொலி காட்சி வாயிலாகவும் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், நியாயமான கோரிக்கைகள் புரிதலின்றி புற க்கணிக்கப்பட்டு தீர்வு எட்டப்பட வில்லை. தற்போது கொரோனா தளர்வு காரணமாக முதல்-அமைச்சர் ஊர் ஊராக தேர்தல் பரப்புரை செய்கிறார். பஸ் போக்குவரத்து, தியேட்டர் திறப்பு உள்ளிட்டவை மீண்டும் வழக்கமான செயல்பாட்டுக்கு வந்து விட்டது. எனவே, விவசாயிகள் குறைதீர் கூட்டங்களை நேரடியாக நடத்த வேண்டும் என கூறினார்.

இனி நேரடியாக நடத்தப்படும்

பின்னர் கலெக்டர் சிவராசு கூறுகையில், `இந்த மாதம் 12-ந் தேதி மட்டும் காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். பிப்ரவரி மாதத்தில் இருந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும்' என்றார்.அதை ஏற்றுக்கொண்டு, சிறிது நேரம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.

Next Story