சிதம்பரம் அருகே ஊருக்குள் உலா வரும் முதலைகளால் மக்கள் அச்சம் பண்ணை அமைக்க கோரிக்கை


சிதம்பரம் அருகே ஊருக்குள் உலா வரும் முதலைகளால் மக்கள் அச்சம் பண்ணை அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 Jan 2021 5:58 AM GMT (Updated: 10 Jan 2021 5:58 AM GMT)

சிதம்பரம் பகுதிகளில் முதலைகள் ஊருக்குள் உலா வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இப்பகுதியில் முதலைப்பண்ணை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்ணாமலைநகர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் முதலைகள் சுதந்திரமாக ஊருக்குள் உலா வருவதை காணலாம். காவிரியின் வடிகாலான கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலத்தில் மேட்டூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து ஏராளமான முதலை குட்டிகள் அடித்து வரப்பட்டு கடலுக்குள் செல்ல முடியாமல் பழைய கொள்ளிடத்தில் தங்கிவிட்டதே இந்த பகுதியில் முதலைகள் பெருகியதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.

சிதம்பரம் அருகே உள்ள கான்சாகிப் வாய்க்கால், ராஜன் வாய்க்கால், பாசிமுத்தான் ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் முதலைகள் அதிகமாக உள்ளன. இதனால் பழைய கொள்ளிடத்தின் கரையை ஒட்டியுள்ள வேளக்குடி, வல்லம்படுகை, அகரநல்லூர், பழையநல்லூர், கண்டியாமேடு, காட்டுக்கூடலூர் நந்திமங்கலம், கோப்பாடி, வக்காரமாரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி முதலைகள் ஊருக்குள் உலா வருவதால் கிராம மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

கூண்டுக்குள் குளிக்கும் மக்கள்

சிதம்பரம் பகுதியில் முதலை கடித்து பலர் இறந்து உள்ளதாலும் பல கால்நடைகள் இறந்துள்ளதாலும் மக்கள் நீரில் இறங்கி குளிப்பதற்கு அச்சப்படுகின்றனர். இதனால் முதலைகளுக்கு பயந்து பழைய கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கூண்டுக்குள் மக்கள் குளிக்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சிதம்பரம் அருகே வல்லம்படுகை பகுதியில் குட்டையில் தேங்கிய மழைநீரில் ஒரு முதலையை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் முதலை அங்கிருந்து தப்பி சென்றது. இருப்பினும் அந்த முதலையை தேடிப்பார்த்தும், அது பிடிபடவில்லை.

முதலை பிடிக்கும் வாகனம்

இதேபோன்று சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை எடப்பாளையம் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை குட்டி உலா வந்துள்ளது. இதுபோல் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடிக்கடி முதலைகள் வெளி வருகின்றன. பாலமான், பழைய கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதலைகள் உள்ளதால் நீரில் இறங்க வேண்டாம் என வனத்துறையினரால் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக நாய் பிடிப்பதற்கான வாகனங்களை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். முதலைகள் பிடித்து செல்வதற்கான வாகனத்தை பார்த்துள்ளீர்களா அந்த வாகனத்தை சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி பார்க்கலாம்.

பண்ணை அமைக்க கோரிக்கை

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகள் சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்கத்தில் விடப்படுகிறது. இதனால் அவற்றின் எண்ணிக்கை பெருகுவதுடன் அவை சுலபமாக அங்கிருந்து வெளியேறி விடுகின்றன. ஆகையால் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகளை முதலைப்பண்ணை வைத்து அதனை பராமரிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story