உத்திரமேரூர் அருகே மாயமான 2 மாதங்களுக்கு பிறகு காட்டில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட எலக்ட்ரீசியன்; கொலையா? போலீசார் விசாரணை


ரூபேஷ்குமார்
x
ரூபேஷ்குமார்
தினத்தந்தி 11 Jan 2021 11:53 PM GMT (Updated: 11 Jan 2021 11:53 PM GMT)

உத்திரமேரூர் அருகே மாயமான எலக்ட்ரீசியன் 2 மாதங்களுக்கு பிறகு காட்டில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

மனித எலும்புக்கூடு
உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்த கிளக்காடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ரூபேஷ்குமார் (வயது 44). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி ஆனந்திக்கு, அஜித்குமார், சஞ்சய் குமார் என்ற மகன்களும், 2-வது மனைவி அனிதாவிற்கு சஞ்சனா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் ரூபேஷ்குமாரை காணவில்லை என 2 மனைவிகளும் சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூபேஷ்குமாரை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று காலை களக்காடு அருகே உள்ள ஈச்சங்காடு அருகில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகூடு ஒன்று கிடப்பதை கண்ட பொதுமக்கள் சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட போலீசார் ஈச்சங்காட்டில் கிடந்த எலும்புக்கூட்டை கைப்பற்றினர்.

தற்கொலையா?
மேலும் அங்கிருந்து மீட்கப்பட்ட செருப்பு மற்றும் உடைகளை ரூபேஷ்குமார் மனைவிகளிடம் காண்பித்தபோது, அது ரூபேஷ்குமார் எலும்புக்கூடு தான் என உறுதியானது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அருகில் இருந்த மரத்தில் தூக்கு கயிற்றில் தொங்கி ரூபேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதுகின்றனர். மேலும் கொரோனா காலகட்டத்தில் எந்த வேலையும் இல்லாமல் மன உளைச்சலில் இருந்த ரூபேஷ்குமார் தான் தற்கொலை செய்யப்போவதாக கூறி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் எலும்பு துண்டுகள் மற்றும் மண்டை ஓட்டைய ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story