ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கோழி இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு


ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கோழி இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 15 Jan 2021 5:08 AM GMT (Updated: 2021-01-15T10:38:09+05:30)

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கோழி இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஊட்டி,

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வருவதால், அந்த மாநிலத்தையொட்டி உள்ள நீலகிரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் மற்றும் அதிகாரிகள் நேற்று ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கோழி இறைச்சி கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர். அங்கு கூண்டில் விதிமுறைக்கு மாறாக அதிக கோழிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதா?, குறிப்பிட்ட நாட்களுக்குள் கோழிக்கூண்டு மற்றும் சுற்றுப்புறம் சுத்தம் செய்யப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.

அசாதாரண இறப்புகள்

அப்போது சுகாதாரம் இல்லாமல் காணப்பட்ட கோழி இறைச்சி கடைகளை சுகாதாரமாக வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து இணை இயக்குனர் பகவத் சிங் கூறும்போது, பறவை காய்ச்சல் தடுப்பு வழிமுறைகளின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோழி பண்ணை மற்றும் இறைச்சி கடைகளில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பண்ணை உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பறவை காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என்றார்.

துண்டு பிரசுரங்கள்

மேலும் கறிக்கோழி விற்பனையாளர்களுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கோழிப்பண்ணைகள் உள்ள இடங்களில் வன பறவைகள் வருவதை தடுக்க வேண்டும். வன பறவைகளை கவரும் வகையிலான உணவு பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். கொக்கு, நாரை போன்ற நீர்ப்பறவைகள் நுழையாமல் தடுக்கும் வகையில் பண்ணை வளாகத்திற்குள் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 2 சதவீத சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலை பண்ணை மற்றும் இறைச்சி கடையின் நுழைவுவாயிலில் தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


Next Story