உப்புக்கோட்டை அருகே பென்னிகுவிக் பிறந்தநாளை பொங்கல் வைத்து கொண்டாடிய கிராம மக்கள்; துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு


பென்னிகுவிக் சிலைக்கு தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா மாலை அணிவித்து மரியாதை
x
பென்னிகுவிக் சிலைக்கு தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா மாலை அணிவித்து மரியாதை
தினத்தந்தி 15 Jan 2021 10:12 PM GMT (Updated: 2021-01-16T03:42:06+05:30)

உப்புக்கோட்டை அருகே பாலார்பட்டியில் பென்னிகுவிக் பிறந்தநாளை கிராம மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

பென்னிகுவிக் பிறந்தநாள்
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் என்பவரது சீறிய முயற்சியால் பல இயற்கை இடர்பாடுகளை தகர்த்தெறிந்து முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டது. நூற்றாண்டை கடந்தும் இந்த அணை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாள் பொங்கல் பண்டிகையையொட்டி வருவது கூடுதல் சிறப்பு. அதன்படி, தேனி மாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட பாலார்பட்டியில் பென்னிகுவிக் பெருமையை பறைசாற்றும் வகையில் அவரது பிறந்தநாளை கிராம மக்கள் பொங்கல் வைத்து திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். இதுதவிர தற்போது அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் வைத்தனர்
இந்தநிலையில் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 180-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாலார்பட்டியில் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா, அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்தார். இதில் தேனி எம்.பி. ரவீந்திரநாத், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, கூடலூர் அ.தி.மு.க. நகர செயலாளர் அருண்குமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பென்னிகுவிக்கின் உருவப்படத்தை கிராம மக்கள் ஊர்வலமாக கொண்டுவந்து, ஊரின் நடுவே உள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்தின் முன்பு வைத்தனர். பின்னர் கிராம மக்கள் சார்பில் அங்கு பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பென்னிகுவிக்கின் உருவப்படத்திற்கு படையல் இடப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி. உள்பட பலரும் பென்னிகுவிக் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாட்டு வண்டியில்...
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோருக்கு கிராம மக்கள் சார்பில் சிலம்பாட்டம், தேவராட்டத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர்கள் 2 பேரும் மாட்டு வண்டியில் ஏறி ஊர்வலமாக வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, பாலார்பட்டி ஆண்டி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்த விழாவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் லோயர்கேம்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் நடந்த விழாவிலும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, அங்குள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விவசாயிகள் மரியாதை
பின்னர் 5 மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கம், முல்லைப்பெரியாறு பாதுகாப்பு குழு, முல்லைப்பெரியாறு அணை மீட்புக்குழு, 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்கம், கூடலூர் மக்கள் மன்றம், பென்னிகுவிக் பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்கம், இயற்கை வேளாண் விவசாயிகள் சங்கம், 10-வது வார்டு காமாட்சி அம்மன் கோவில் இளைஞர் அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.வினர் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சார்பில் பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தேசிய செட்டியார்கள் பேரவை சார்பில் ஆனைமலையன்பட்டியில் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா, பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இதற்கு பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கி, விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு பரிசு பொருட்கள், கரும்பு வழங்கினார். இதையடுத்து உத்தமபாளையத்தில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் ஆனைமலையன்பட்டி பொறுப்பாளர் சந்திரன், துப்பாக்கி ரகுமத்துல்லா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அ.ம.மு.க.
தேனி தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் உத்தமபாளையத்தில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில், கம்பம் நகர செயலாளர் ராஜாமணி தலைமையில் மாவட்ட செயலாளர் முத்துசாமி, அ.ம.மு.க. ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளர் ஸ்டார் ரபிக், உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் தீபாவளி ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story