வெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக நாகர்கோவில் டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி

வெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி நாகர்கோவிலை சேர்ந்த டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த போலி வக்கீலை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் டாக்டர்
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 52). டாக்டரான இவர் அப்பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2019 ஆண்டு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில், நான் நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றை நடத்தி வருகிறேன். மற்றொரு ஆஸ்பத்திரியை தொடங்க நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலத்தை வாங்கி ஆஸ்பத்திரி அமைக்கும் பணிகளை தொடங்கினேன்.
வெளிநாட்டு வங்கியில் கடன்
அப்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அருள் முருகன்(52) என்பவர் வெளிநாட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு தொடங்கினால், ரூ.50 கோடி கடனாக பெற்று தருவாக கூறினார். அதற்காக அந்த வங்கியில் பணத்தை முதலீடு செய்துள்ள தனக்கு தெரிந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் கடனாக பணம் பெற்று தருதாகவும் கூறினார்.
இதற்காக அருள்முருகன் கமிஷன் அடிப்படையில் ரூ.1½ கோடி தரவேண்டும் என கூறினார். இதனைதொடர்ந்து அருள்முருகன் என்னிடம் இருந்து ரூ.1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பெற்று கொண்டார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த நான் அருள்முருகனின் வீட்டுக்கு சென்றேன். ஆனால் ஆங்கே அவர் அளித்த முகவரியில் அருள்முருகன் என்ற நபர் அங்கு இல்லை என தெரியவந்தது. மேலும் அவர் வக்கீல் இல்லை என்றும் பண மோசடி செய்ததையும் அறிந்தேன் என புகாரில் தெரிவித்து இருந்தார்.
மோசடி வழக்கு
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் தலைமறைவான அருள்முருகனை தேடி வந்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வைத்து அருள்முருகனை கைது செய்து அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
திடுக்கிடும் தகவல்கள்
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-
ராமதாசிடம், அருள்முருகன்தான் தென்காசி ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் கூறியிருந்தார். ஆனால் அது பொய்யான தகவல் என்றும், அவர் போலி வக்கீல் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அருள்முருகனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு காலாங்கரை என்பதும் தெரியவந்தது. இவரது உன்மையான பெயர் நல்லக்கனி . மேலும் இவர் மீது கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு, மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விசாரணை
டாக்டரிடம் பண மோசடியில் ஈடுபட அவர் தனது தோற்றத்தை பல்வேறு விதமாக மாற்றியும், போலியான வக்கீல் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றை தயாரித்து இருந்ததும் தெரிவந்துள்ளது.
போலீசார் அவற்றை கைப்பற்றியுள்ளனர். மேலும் இதுபோன்று நல்லக்கனி பலரிடம் பண மோசடி செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story