அம்மனுக்கு படையல் வைக்க பொங்கல் வைத்தபோது தேனீக்கள் கொட்டியதில் 17 பேர் படுகாயம்


அம்மனுக்கு படையல் வைக்க பொங்கல் வைத்தபோது தேனீக்கள் கொட்டியதில் 17 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 16 Jan 2021 8:45 PM GMT (Updated: 2021-01-17T01:30:30+05:30)

ஊத்துக்கோட்டை அருகே அம்மனுக்கு படையல் வைக்க பொங்கல் வைத்தபோது, தேன் கூட்டில் புகை பட்டதால் வெளியே வந்த தேனீக்கள் கொட்டியதில் சிறுவர், சிறுமிகள் உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனீக்கள் கொட்டியது
ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் கூடியம் பகுதியில் மன்னாசி அம்மன் கோவில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள கசவநல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர், குல தெய்வமான அண்ணாச்சி அம்மன் கோவிலில் வழிபட நேற்று மாலை கூடியம் குகைக்கு சென்றனர்.

அங்கு அம்மனுக்கு படையல் வைக்க பொங்கல் சமைத்தனர். அப்போது அடுப்பில் இருந்து வெளியேறிய புகைமூட்டத்தால், அங்குள்ள தேன்கூட்டில் புகை பட்டதால் அதில் இருந்த தேனீக்கள் படையெடுத்து வந்து அங்கிருந்தவர்களை கொட்டின.

17 பேர் படுகாயம்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், தேனீக்களிடம் இருந்து தப்பிக்க ஓடினர். எனினும் தேனீக்கள் வளைத்து வளைத்து கொட்டியதில் கிருஷ்ணன் (வயது 42), கலா (36), விஷால் (21), கிருஷ்ணன் (4), தீபக்சுனில் (20), வள்ளி (19), ஏ.ரேவதி (21), கமலேஷ் (2), ரேவதி (21), விஷாலி (23), நிஷாலி (19), மோகன் (19), ரோஷன் (4), திருத்தணியை சேர்ந்த மணிவண்ணன் (26), பல்லவி (19), லோகேஸ்வரி (23), லயா (13) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களை கட்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story