நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகை


நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகை
x
தினத்தந்தி 16 Jan 2021 11:50 PM GMT (Updated: 16 Jan 2021 11:50 PM GMT)

நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டிமடம், 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள காட்டாத்தூர் கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் ஒன்றிணைந்து விளையாட்டு போட்டிகளை நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். அப்போது ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், விளையாட்டு போட்டிகளை வர்ணிக்க அமைக்கப்பட்டிருந்த மைக் செட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி ஒன்றிய தலைவர் மனோகரன் என்பவர், அனுமதி இல்லாமல் மைக் செட் வைத்து பல போராட்டங்கள் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நடக்கின்றன. தமிழர் திருநாள் போட்டிகள் அருகில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. காட்டாத்தூர் கிராமத்தில் மட்டும் ஏன் தடை செய்கிறீர்கள்? என்று போலீசாரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து அவரை, பொதுமக்கள் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் தாக்கி ஜீப்பில் ஏற்றியதாகவும், அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மனோகரனை ஜீப்பில் இருந்து இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த இந்து முன்னணியினர் மாவட்ட துணை தலைவர் பழனிசாமி தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமபாலமுருகன் முன்னிலையில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திரண்டு, இந்து முன்னணி நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வலியுறுத்தியும், மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும் என்று வற்புறுத்தியும் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, புகார் மனுவை பெற்று, இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஆண்டிமடம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story