புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது


புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 17 Jan 2021 12:40 AM GMT (Updated: 17 Jan 2021 12:40 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல்நாளில் 65 பேருக்கு செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை, 

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பு மருந்துகள் முதல் கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட சுகாதார பணியாளர்கள் என முன்களப் பணியாளர்களுக்கு போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் தடுப்பூசியை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பூவதி நேற்று போட்டுக்கொண்டார். செவிலியரில் மருத்துவமனையில் பணியாற்றும் ரேணுகா என்பவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட பின் அனைவரும் அரை மணி நேரம் தனி அறையில் கண்காணிக்கப்பட்டனர்.

அரசு மருத்துவமனைகள்

இந்த தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் உமாமகேஸ்வரி பார்வையிட்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை, ஆலங்குடி அரசு மருத்துவமனை, திருவரங்குளம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள் 10 ஆயிரத்து 199 பேருக்கு செலுத்தப்படுகிறது.

நாளை (திங்கட்கிழமை) முதல் 75 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 13 அரசு மருத்துவமனைகளிலும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு தேவையான 6,900 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தும் 1,100 கோவேக்சின் தடுப்பூசி மருந்தும் என ஆக மொத்தம் 8 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அச்சப்பட தேவையில்லை

தடுப்பூசி போடுவதற்கு பெயர்கள் தனியாக இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. முன்களப் பணியாளர்கள் விடுபட்டிருந்தாலும் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்களப்பணியாளர்கள் நலமுடன் உள்ளனர். எனவே முன்களப்பணியாளர்கள் எந்தவித அச்சமும் இன்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துணை இயக்குனர் கலைவாணி, அரசு மருத்துவக்கல்லூரி நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி, மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட டீன் பூவதியை கலெக்டர் உமாமகேஸ்வரி கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

65 பேருக்கு...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முதல் நாளில் 65 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக முன்களப் பணியாளர்களில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,270 பேருக்கும், அறந்தாங்கி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 358 பேருக்கும், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் 224 பேருக்கும், திருவரங்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 240 பேருக்கும் என புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் 2,092 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் இரண்டு தனித்தனி இடங்களில் போடப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், முதல் நாளில் தடுப்பூசி போட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர். 4 வாரங்களுக்கு பின் மேலும் ஒரு டோஸ் ஊசி போடப்படும். இந்த இடைப்பட்ட நாட்களில் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். 2-வது தடுப்பூசி போட்டபின் முழுமையாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்' என்றனர்.

பேட்டி

கொரோனா தடுப்பூசி போட்ட பின் டீன் பூவதி கூறுகையில், ஊசி போட்டதில் எந்தவித வலியும் இல்லை. உடலில் எந்த மாற்றமும் இல்லை. நலமுடன் உள்ளேன். மாவட்டத்தில் முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதில் மகிழ்ச்சி என்றார். இதேபோல செவிலியர் ரேணுகாவும் கூறினார்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட டீன் மற்றும் செவிலியரின் செல்போன் எண்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர்.

Next Story